பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம்


பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 19 July 2018 4:00 AM IST (Updated: 19 July 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்தல் மற்றும் தடை செய்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

ஊத்துக்கோட்டை,


தமிழகத்தில் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் உபயோகிப்பதை தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத பேரூராட்சி என்ற நிலை உருவாக்கிட சிறு வியாபாரிகள், பெருவியாபாரிகள், பூக்கடை, காய்கறி கடைகாரர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவதை தவிர்த்தல் மற்றும் தடை செய்வதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிளாடிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கி பேசினார்.

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், ஆசிரியர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே விட்டு விட வேண்டும் என்று கேட்டு கொண்டனர். கலந்தாய்வு கூட்டத்தில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் சிவசங்கரன் நன்றி கூறினார்.


திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக மாற்றுதல் தொடர்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தடைசெய்தல் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் வியாபாரிகள், பூக்கடை காரர்கள், காய்கறி கடைகாரர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பாக வியாபாரிகள் மற்றும் மகளிர் குழுக்களுக்கான ஆலோசனை கருத்தரங்கம் பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் சங்கத்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு செயலாளர் அப்துல் கரீம், பொருளாளர் பன்னீர்செல்வம், பேரூராட்சியின் இளநிலை உதவியாளர் நரேந்திரன், மகளிர் தொண்டு நிறுவன நிர்வாகி பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வியாபாரிகளும், மகளிர் குழுவினரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து தங்களது கருத்துகளை முன்வைத்தனர். இதில் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாது நாம் அன்றாடம் பயன்படுத்தும் மாற்று பொருட்களுக்கான கண்காட்சியும் நடைபெற்றது. முன்னதாக துப்புரவு மேற்பார்வையாளர் கோபி வரவேற்றார். பதிவறை எழுத்தர் கருணாநிதி நன்றி கூறினார்.

Next Story