தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி திருட்டு


தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி திருட்டு
x
தினத்தந்தி 19 July 2018 3:30 AM IST (Updated: 19 July 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் சத்துவாச்சாரியில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்களை திருடியவர் முகத்தை மூடியபடியே தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-5, 6-வது தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 33). இவருடைய மனைவி விஜயலேகா (28). இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. பாபு சென்னை ஆவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பாபு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் இரவு 10 மணி காட்சி சினிமா பார்க்க சென்றார்.

பின்னர் அனைவரும் நள்ளிரவு 1 மணியளவில் காரில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கேட் மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த பாபு, காரின் கதவை திறந்து வீட்டின் உள்ளே செல்ல முயன்றார். அந்த சமயம் டவுசர் அணிந்த 30 வயது மதிக்கத்தக்க மர்மநபர் முகத்தில் கைக்குட்டை கட்டியபடி மூட்டை ஒன்றுடன் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தான்.

இதைக்கண்ட பாபு ‘திருடன்’... ‘திருடன்’... என சத்தம் போட்டார். அவரின் சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் ஓய்வுப்பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டை விட்டு வெளியே வந்தார். அவருடன் சேர்ந்து பாபு மர்மநபரை விரட்டி சென்றார். ஆனால் மர்மநபர் வேகமாக ஓடி அப்பகுதியில் உள்ள முட்புதரில் குதித்து தப்பியோடினான்.

இதையடுத்து பாபு வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறை முழுவதும் ஆங்காங்கே துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 25 பவுன் நகை, ½ கிலோ வெள்ளிப்பொருட்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாபு, அவரது மனைவி விஜயலேகா மற்றும் அருகே வசிக்கும் ஓய்வுப்பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உள்பட பலரிடம் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாபு தனது குடும்பத்துடன் வெளியே சென்றதை பார்த்த மர்மநபர் நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. பாபு சினிமா பார்க்க சென்று திரும்பும் குறுகிய நேரத்துக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளதால் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர் அதே பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மர்மநபரின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிந்து, நகை, வெள்ளி பொருட்களை திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story