ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ரஷிய இளம்பெண்ணிடம் விசாரணை நடத்த வந்த தூதரக அதிகாரி


ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ரஷிய இளம்பெண்ணிடம் விசாரணை நடத்த வந்த தூதரக அதிகாரி
x
தினத்தந்தி 18 July 2018 11:30 PM GMT (Updated: 18 July 2018 8:37 PM GMT)

திருவண்ணாமலையில் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் ரஷிய இளம்பெண்ணிடம் விசாரணை நடத்த அந்த நாட்டின் தூதரக அதிகாரி மருத்துவமனைக்கு வந்தார். சம்பவம் தொடர்பாக போலீசாரின் விசாரணை வளையத்தில் 15 பேர் சிக்கியுள்ளனர்.


திருவண்ணாமலை,

தமிழகத்தின் முக்கிய ஆன்மிக நகராக திருவண்ணாமலை விளங்குகிறது. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள விடுதிகளில் தங்கி மலையை சுற்றிப்பார்த்து தியானத்தில் ஈடுபடுவார்கள்.

கடந்த 12-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்த ரஷிய நாட்டை சேர்ந்த 21 வயது கொண்ட இளம்பெண் செங்கம் சாலை கஸ்தூரி நகரில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் அறை எடுத்து தங்கினார். 14-ந் தேதி அறைக்கு சென்றவர் அதன்பின்பு வெளியே வரவில்லை. பின்னர் 16-ந்தேதி அவர் தனது அறையில் அலங்கோலமான நிலையில் சுயநினைவின்றி கிடந்தார். அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அந்த பெண்ணை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் பரவியது.

இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ரஷிய நாட்டு இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரவிய தகவல் அறிந்ததும் திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்த அந்த நாட்டை சேர்ந்த பயணிகள் சிலர் மருத்துவமனைக்கு சென்று அப்பெண்ணை பார்த்தனர். சென்னைக்கு சுற்றுலாவிற்கு வந்த ரஷிய நாட்டு சுற்றுலா பயணிகளும் அவரை பார்ப்பதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

இந்த நிலையில் பிற்பகல் 1.45 மணி அளவில் ரஷிய நாட்டு தூதரக விசா சரிபார்ப்பு அதிகாரி டென்னிஸ் மருத்துவமனைக்கு வந்தார். அவர் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் விசாரிப்பதற்காக ஒரு மணி நேரம் அங்கேயே இருந்தார். ஆனால் அந்த பெண், பேசக்கூடிய நிலையில் இல்லை என கூறப்படுகிறது. அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், இன்ஸ்பெக்டர்கள் மங்கையர்கரசி, ஹேமமாலினி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

இதையடுத்து அவர் மருத்துவக் கல்லூரி டீன் நடராஜனை சந்தித்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து தூதரக விசா சரிபார்ப்பு அதிகாரி டென்னிஸ் கேட்டறிந்தார்.


இதற்கிடையே திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மருத்துவமனைக்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி நிருபர்களிடம் கூறியதாவது:-

ரஷிய இளம்பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த பெண் உடல்நலம் தேறி வருகிறார். முழுமையாக தேறியபின்னரே நாங்கள் அவரிடம் விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை தெரிவிக்க முடியும்.

இந்த சம்பவம் தொடர்பாக எங்களது விசாரணை வளையத்துக்குள் 15 பேர் உள்ளனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அந்த இளம்பெண் எழுத்து மூலமாகவோ, வாய்மொழி மூலமாகவோ ஏதாவது கூற வேண்டும். தற்போது வரை அவர் எதுவும் கூறாததால் எங்களால் எதையும் உறுதிப்படுத்தி கூற இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story