விமான நிலையத்தில் விபத்து மீட்பு ஒத்திகையால் பரபரப்பு


விமான நிலையத்தில் விபத்து மீட்பு ஒத்திகையால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 July 2018 10:45 PM GMT (Updated: 18 July 2018 8:49 PM GMT)

திருச்சி விமானநிலையத்தில் விபத்து மீட்பு ஒத்திகையால் பரபரப்பு ஏற்பட்டது.

செம்பட்டு,

திருச்சி விமானநிலையத்தில் விபத்து மீட்பு ஒத்திகை நேற்று மாலை நடந்தது. இதில் விமானத்தில் தீப்பிடித்தால், விபத்து ஏற்பட்டால் பயணிகளை பத்திரமாக, பாதுகாப்பாக மீட்பது குறித்து செய்து காட்டப்பட்டன.

விமானநிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், தீயணைப்பு நிலைய வீரர்கள், மாநகர போலீசார், கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் விமானநிலையத்தில் விமான விபத்தின் போது பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவது போல தத்ரூபமாக செய்துகாட்டினர். மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிப்பதற்காக விமானநிலையத்தில் ஓடுதள பாதை அருகே கூடார வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஓடுதள பாதையில் இருந்து பயணிகளை மீட்டு வேகமாக சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்டிரெச்சரில் தூக்கி வருவது போலவும், ஆம்புலன்ஸ் வேன்களில் ஏற்றுவது போலவும் பரபரப்பாக இருந்தது. பயணிகள் சிலர் ரத்த காயமடைந்ததை போல வேடமிட்டிருந்தனர். மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இந்த ஒத்திகை மாலை 6.30 மணி அளவில் முடிவடைந்தது. விபத்து நேரத்தில் பயணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் முதல் உதவி சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்கள் எடுத்துக்கூறினர்.

இந்த நிலையில் விமான நிலையத்தின் உள்பகுதியில் ஓடுதள பாதை அருகே நடந்த இந்த ஒத்திகையால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் பயணிக்க வந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஒத்திகை என தெரிந்த பின்பு பயணிகள் நிம்மதி அடைந்தனர். இந்த நிகழ்ச்சி குறித்து விமானநிலைய வட்டார அதிகாரிகள் கூறுகையில், “விமானநிலையத்தில் பாதுகாப்பு கருதி விபத்து மீட்பு ஒத்திகை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் தற்போது ஒத்திகை நடந்தது”என்றனர். 

Next Story