கே.ஆர்.பேட்டை அருகே ஹேமாவதி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் சாவு உடலை தேடும் பணி தீவிரம்
கே.ஆர்.பேட்டை அருகே ஹேமாவதி அடித்து செல்லப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மண்டியா,
கே.ஆர்.பேட்டை அருகே ஹேமாவதி அடித்து செல்லப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
ஆற்றில் குதித்தனர்மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா ஹரிஹரபுரா அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் என்ற சிவு (வயது 28). இவருடைய நண்பர் ரமேஷ். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் அந்தப்பகுதியில் ஓடும் ஹேமாவதி ஆற்றுக்கு சென்றனர். அப்போது அக்கி ஹெப்பால்–கே.ஆர்.பேட்டை இடையே உள்ள ஹேமாவதி ஆற்றுப்பாலத்தில் நின்றுக் கொண்டு தண்ணீரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் 2 பேரும் அங்கு செல்பி எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் பாலத்தில் இருந்து ஹேமாவதி ஆற்றுக்குள் குதிக்க முயன்றனர். அப்போது, அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிலர், அவர்களை எச்சரித்துள்ளனர். ஆனாலும், அதனை பொருட்படுத்தாமல் 2 பேரும் ஹேமாவதி ஆற்றில் குதித்துள்ளனர்.
வாலிபர் சாவுஹேமாவதி ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால், அவர்களில் சிவக்குமார் நீரில் அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் 2 பேரையும் மீட்க முயன்றனர். அப்போது ரமேசை அவர்கள் மீட்டனர். ஆனாலும் சிவக்குமாரை அவர்களால் மீட்க முடியவில்லை. இதனால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கே.ஆர்.பேட்டை புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஹேமாவதி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிவக்குமாரின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு வரை அவருடைய உடல் கிடைக்கவில்லை.
உடலை தேடும் பணி தீவிரம்இந்த நிலையில் நேற்று காலையிலும் சிவக்குமாரின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தும் அதனை பொருட்படுத்தாமல் ஹேமாவதி ஆற்றில் குதித்த சிவக்குமார் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கே.ஆர்.பேட்டை புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.