8 வழிச்சாலை திட்டம் குறித்து அனுமதியின்றி பொதுமக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்ட சீமான் கைது


8 வழிச்சாலை திட்டம் குறித்து அனுமதியின்றி பொதுமக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்ட சீமான் கைது
x
தினத்தந்தி 19 July 2018 4:30 AM IST (Updated: 19 July 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே 8 வழிச்சாலை திட்டம் குறித்து அனுமதியின்றி பொதுமக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்டதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 11 பேரை போலீசார் நேற்று திடீரென கைது செய்தனர்.

பனமரத்துப்பட்டி,

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் சாலை அமைய உள்ள இடங்களை அளவீடு செய்து நிலம் கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, கடந்த மே மாதம் 12-ந் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலம் விமான நிலைய விரிவாக்கப்பணிக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஓமலூர் அருகே உள்ள விவசாயிகளை சந்தித்து பேசினார். அவர் பேசும்போது, அரசுக்கு எதிராக விவசாயிகளை தூண்டியதாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் அவருக்கு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி ஓமலூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி சீமான் தினமும் காலை 10 மணிக்கு கையெழுத்திட்டு வந்தார்.

அவ்வாறு சென்று வந்த அவர் நேற்று சேலம் அருகே உள்ள பாரப்பட்டி கிராமம் கூமாங்காடு பகுதிக்கு திடீரென வந்தார். அங்கு அவர், 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்பதற்கு வந்தார். அப்போது அவரிடம் விவசாயிகள், அரசு எங்கள் நிலங்களை எடுத்து கொண்டால் நாங்கள் எங்கே செல்வது? எவ்வாறு பிழைப்பு நடத்துவது? எங்கள் நிலங்களை தர மறுத்தால் போலீசாரின் துணையோடு அதிகாரிகள் எங்கள் நிலங்களில் அளவீடு செய்து எல்லைக்கல் நட்டுள்ளனர் என்று தங்கள் குறைகளை கூறினர்.

அப்போது சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமிநாராயணன் தலைமையில் அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர். சீமானிடம், துணை போலீஸ் சூப்பிரண்டு பேசினார். அவர் பேசும்போது, இந்த பகுதியில் கருத்து கேட்பு கூட்டம் உள்ளிட்ட பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், தடையை மீறி நீங்கள் பொதுமக்களை ஒன்று கூட்டி உள்ளர்கள் என்றும் தெரிவித்தார். மேலும் நிபந்தனை ஜாமீனில் இருப்பதால் உரிய அனுமதியின்றி பொதுமக்களை கூட்டி பேசக்கூடாது என்றும் கூறிய துணை போலீஸ் சூப்பிரண்டு, போலீசாருடன் சேர்ந்து சீமானை திடீரென கைது செய்ய முயன்றார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

சீமானை கைது செய்யக் கூடாது என்றுக் கூறி அங்கு கூடியிருந்த விவசாயிகளும், நாம் தமிழர் கட்சியினரும் போலீசாரை முற்றுகையிட்டனர். மேலும் அவரை கைது செய்யும் முன்பு எங்களை கைது செய்யுங்கள் எனக்கூறி கூச்சலிட்டனர். இதை மீறி போலீசார் சீமானை கைது செய்து குண்டுக்கட்டாக அழைத்து சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது சீமான், ‘போலீசார் என்ன? ஏது? என்று தெளிவாக சொல்லாமல், வேண்டும் என்றே என்னை கைது செய்கிறார்கள். எதற்காக கைது செய்கிறார்கள்? என்பதை தெளிவாக சொல்ல மறுக்கின்றனர்’ என கூறினார்.

மேலும் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் ஜானகி (வயது 65), தேவி(38) ஆகியோரும், கட்சி நிர்வாகிகள் யுவராஜ் (28), ஜெகதீஸ் பாண்டியன் (45), தமிழ்செல்வன்(29), சிவகுமார்(34), தமிழரசன்(29), மணி(36), தீபக்(27), அழகரசன்(28) ஆகிய 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே அவர்களை அழைத்து செல்லும் போலீஸ் வேனை வழிமறித்த பொதுமக்கள், வேனை விட மறுத்து அதன் முன்பு நின்று கொண்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி விட்டு கைது செய்யப்பட்ட சீமான் உள்பட 11 பேரையும் வேனில் மல்லூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்று காவலில் வைத்தனர். விவசாயிகளிடம் குறைகேட்க வந்த சீமான் திடீரென கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

Next Story