8 வழி பசுமை சாலை பிரச்சினையில் மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு


8 வழி பசுமை சாலை பிரச்சினையில் மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 18 July 2018 11:00 PM GMT (Updated: 18 July 2018 9:42 PM GMT)

8 வழி பசுமை சாலை பிரச்சினையில் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருப்போம், என்று கருத்து கேட்பு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி காளியம்மன் கோவில் முன், 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் பா.ம.க. சார்பில் நேற்று நடந்தது. இதில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு விவசாயிகளிடம் கருத்து கேட்டார்.

இதில் கலந்து கொண்ட விவசாயிகள், 8 வழி பசுமை சாலை திட்டத்தினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. விவசாயத்தை நம்பி இருக்கும் நாங்கள் இனி எப்படி வாழ்க்கை நடத்துவோம்? என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட 80 வயது பெண் ஒருவர் தனது நிலத்தை கையகப்படுத்த விட மாட்டேன், என்று ஆவேசத்துடன் கூறினார்.

பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

8 வழி பசுமை சாலை அமைக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக விவசாயிகளை அச்சுறுத்தி, துன்பப்படுத்தி போலீசாரை வைத்து மிரட்டி, யாராவது போராடினால் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புகிறார்கள். 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து ஆய்வறிக்கை தயார் செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பப்படும். அரசியல் ரீதியாக மக்களை திரட்டி போராடுவோம்.

சேலத்தில் இருந்து சென்னை செல்ல 2 ரெயில் தடங்கள், விமான சேவை, மூன்று சாலை வழிகள் இருக்கும்போது இந்த 8 வழி பசுமை சாலை எதற்கு?. இந்த திட்டத்திற்கு பதிலாக சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான வழிச்சாலையை கிழக்கு கடற்கரை சாலை வழியாக அமைத்தால் தென் தமிழகம் வளம்பெறும்.

ரஜினிகாந்த் 8 வழி பசுமை சாலை தேவை, இது வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்கிறார். அவருக்கு இந்த சாலையை பற்றி விவரம் தெரியவில்லை.

எடப்பாடி பழனிசாமி 96 சதவீத மக்கள் தாமாக முன்வந்து நிலங்களை தருகின்றனர் என்று கூறுவது உண்மையென்றால் வாக்கெடுப்பு நடத்தட்டுமே. தர்மபுரி மாவட்டத்தில் 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைய உள்ளது.

மேட்டூர் அணை நாளை (அதாவது இன்று) திறக்கப்பட உள்ளது. தொலைதூர நோக்குடன் அரசு செயல்பட்டு இருந்தால் 2 நாட்களுக்கு முன் தண்ணீரை திறந்து இருக்கலாம். எஸ்.பி.கே. நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது. இதில் பல கோடி ரூபாய் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இது நெடுஞ்சாலைத்துறை சம்பந்தப்பட்டது என்பதால் இதில் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். கூட்டணி குறித்து தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு முடிவு செய்வோம்.

8 வழி பசுமை சாலை பிரச்சினையில் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, மாநில துணை செயலாளர் அரசாங்கம், மாநில அமைப்பு துணை செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட செயலாளர் இமயவர்மன், பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சின்னப்ப கவுண்டர், மைக்கண்ண்ன், முத்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story