ஆலந்தூரில் பயங்கரம்: கை, கால்களை கட்டி செல்போன் வியாபாரி எரித்துக்கொலை


ஆலந்தூரில் பயங்கரம்: கை, கால்களை கட்டி செல்போன் வியாபாரி எரித்துக்கொலை
x
தினத்தந்தி 19 July 2018 4:00 AM IST (Updated: 19 July 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

ஆலந்தூரில் கை, கால்களை கட்டி செல்போன் வியாபாரி எரித்து கொலை செய்யப்பட்டார். காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்,


சென்னை ஆலந்தூர் எம்.கே.என்.சாலை 2-வது சந்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து புகை வெளியானது. தகவல் அறிந்த கிண்டி ராஜ்பவன் தீயணைப்பு வீரர்கள் நேரில் சென்று பார்த்தபோது அந்த வீடு பூட்டி கிடந்தது. இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அப்போது அந்த வீட்டின் படுக்கை அறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் எரிந்து கருகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. உடனே பரங்கிமலை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் மோகன்தாஸ் ஆகியோர் விரைந்து வந்தனர். பின்னர் எரிந்த நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் அந்த வீட்டில் வசித்து வந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த முகமது சுல்தான் (வயது 40) என்பது தெரியவந்தது. இவர், கடந்த 2½ ஆண்டுகளாக அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இவர் செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்து உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அடிக்கடி பெண்கள் சிலர் வந்து சென்றதும் தெரியவந்தது.


தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறில் முகமது சுல்தானை மர்மநபர்கள் கட்டி போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றார்களா? அல்லது பெண்கள் அடிக்கடி வந்து சென்றதால் பெண்கள் தொடர்பால் ஏற்பட்ட தகராறு காரணமாக யாராவது அவரை கொன்றார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லாததால், அவரது வீட்டிற்கு யார் வந்து சென்றார்கள்? என்று தெரியவில்லை. இதையடுத்து முகமது சுல்தானின் செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு பேசியவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story