தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 8-ம் வகுப்பு மாணவன் சாவு


தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 8-ம் வகுப்பு மாணவன் சாவு
x
தினத்தந்தி 18 July 2018 9:59 PM GMT (Updated: 18 July 2018 9:59 PM GMT)

செஞ்சி அருகே அரசு பள்ளியில் மூடப்படாமல் கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான். இதுதொடர்பாக கட்டிட காண்டிராக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி, 

அரசு பள்ளியில் நடந்த இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெரியகரத்தில் ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,205 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் தற்போது ரூ. 1 கோடியே 91 லட்சம் செலவில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அருகே கழிவறை கட்டும் வகையில் அதற்கு கழிவுநீர் தொட்டி(செப்டிக் டேங்க்) கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருவதால், அதற்கு தேவையான தண்ணீரை எடுப்பதற்கு வசதியாக கழிவுநீர் தொட்டியில் தண்ணீரை நிரப்பி, அதை தற்காலிகமாக தண்ணீர் தொட்டியாக பயன்படுத்தி வந்தனர். இந்த தொட்டி மூடப்படாமல் எப்போதும், திறந்த நிலையிலேயே இருக்கும்.

நேற்று காலை வழக்கம் போல் கட்டுமான தொழிலாளர்கள் அங்கு வேலைக்கு வந்தனர். அப்போது, அவர்கள் தண்ணீர் தொட்டியின் அருகே வந்த போது, அங்கு கிடந்த தண்ணீரின் உள்ளே ஒரு சிறுவன் சட்டை மட்டும் அணிந்த நிலையில் பிணமாக மிதந்தான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே இதுகுறித்து பள்ளியில் இருந்த ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது அங்கு பிணமாக கிடந்தது, அதேபள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த செஞ்சி அருகே உள்ள மேல்அருங்குணம் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகன் சிவராமன்(வயது 13) என்பது தெரியவந்தது.

உடன் இதுகுறித்து செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து, தண்ணீர் தொட்டியில் கிடந்த சிவராமனின் உடலை மீட்டனர். இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த மாணவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு விரைந்து வந்தனர். அங்கு பிணமாக கிடந்த சிவராமனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து, மாணவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் வந்து, விசாரணை நடத்தினார்.

மாணவன் தண்ணீர் தொட்டியில் எப்படி விழுந்து இறந்தான்? என்பது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாவது:-

மாணவன் சிவராமன் தனது கிராமத்தில் இருந்து பள்ளிக்கு வரும் நேரத்தில் பஸ் வசதி இல்லாத காரணத்தினால், கிராமத்துக்கு காலையில் வரும் முதல் பஸ்சிலேயே ஏறி பள்ளிக்கு வந்துவிடுவது வழக்கம். அதன்படி நேற்று காலை 8 மணிக்கு முன்னதாகவே சிவராமன் பள்ளிக்கு வந்துள்ளான்.

இந்த நிலையில் பள்ளியில் கழிவறை வசதி இல்லாத காரணத்தினால், திறந்த வெளி பகுதிக்கு சென்று இயற்கை உபாதை கழிப்பதற்காக சிவராமன் சென்றுள்ளான். பின்னர், கை, கால்களை கழுவுவதற்காக அங்கு இருந்த தண்ணீர் தொட்டிக்கு வந்து தண்ணீரை எடுப்பதற்கு முயன்றுள்ளான்.

அதில் கால் தவறி உள்ளே விழுந்து இறந்து இருக்கலாம். இதனால் தான் மாணவன் சட்டை மட்டும் அணிந்த நிலையில் தொட்டிக்குள் கிடந்துள்ளான் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். இருப்பினும் அவனது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிவராமனின் பெரியப்பா ஏழுமலை செஞ்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பள்ளி கட்டிட ஒப்பந்ததாரர் முருகேசன்(59), மேற்பார்வையாளர் ஜெயராமன்(59) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் கழிப்பறை வசதி என்பது இல்லை. ஏற்கனவே இருந்த ஒரு கழிப்பறை கட்டிடமும் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால் பயன்பாடின்றி, கட்டிடம் சேதமடைந்த நிலையில் கிடக்கிறது. இதுபோன்ற காரணம் தான் மாணவன் சிவராமனின் உயிரை பறித்துவிட்டது என்று சக மாணவர்கள் தெரிவித்தனர். மாணவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. பள்ளிக்கு நேரில் சென்று, சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். 

Next Story