வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி; கணவன்-மனைவி கைது


வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி; கணவன்-மனைவி கைது
x
தினத்தந்தி 19 July 2018 4:15 AM IST (Updated: 19 July 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்ததாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

மேட்டூர் அணை பகுதியை சேர்ந்தவர் பாலதண்டபாணி. இவருடைய மனைவி கொடியரசி (வயது 45). இவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் எனக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா அலவாய்பட்டியில் உள்ள வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஈசாக் (43) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகமானார். என்னுடைய மகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர் பணி வாங்கி தருவதாகவும், வேலைக்கு விண்ணப்பித்து இருந்தால் உறுதியாக வேலை வாங்கி தருவதாகவும் ஈசாக் கூறினார். இதை நம்பி அவரிடம் நான் ரூ.18 லட்சம் கொடுத்தேன். இந்த பணத்தை பெற்றுக்கொண்டு அவர் வேலை வாங்கி தராமல் இருந்து வந்தார். இதனால் அவரிடம் நான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன்.

இதைத்தொடர்ந்தும் அவர் வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பி தராமலும் இருந்து வந்தது தொடர்பாக ஈசாக் வீட்டுக்கு சென்று கேட்டேன். அப்போது அவர் மற்றும் அவருடைய மனைவி தேவிகா (35) ஆகியோர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே ரூ.18 லட்சத்தை மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்த கணவன், மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்பாதுரை விசாரணை நடத்தி ஈசாக், தேவிகா மீது வழக்குப்பதிவு செய்தார். நேற்று கணவன், மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story