பால் விவசாயிகளுக்கு எதிரான வழக்குகள் திரும்ப பெறப்படும் முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு
பால் விவசாயிகளுக்கு எதிரான வழக்குகள் திரும்பப்பெறப்படும் என சட்டசபையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.
நாக்பூர்,
பால் விவசாயிகளுக்கு எதிரான வழக்குகள் திரும்பப்பெறப்படும் என சட்டசபையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.
வன்முறை சம்பவங்கள்
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.5 அதிகரிக்கவேண்டும், அரசு மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பால் விவசாயிகள் வேலை நிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டதின் போது பல இடங்களில் வன்முறை வெடித்தது. பால் வேன்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டன, தீ வைக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பால் விவசாயிகள் சிலரை கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து நேற்று நாக்பூரில் நடந்த மழைக்கால சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் பேசினார்.
வழக்கை திரும்பபெற வேண்டும்
அப்போது அவர் கூறுகையில், “பால் விவசாயிகளின் போராட்டத்தின்போது சில இடங்களில் டேங்கர் லாரிகள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக பால் விவசாயிகளை போலீசார் கைது செய்து, அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த அரசாங்கம் விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதாக தெரியவில்லை. எனவே குறைந்தபட்சம் அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையாவது திரும்பப்பெற வேண்டும்.
வழிப்பறி கொள்ளையர்களுக்கு எதிரான சட்டப்பிரிவுகளின் கீழ் கூட விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதற்கு பதில் அளித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
விவசாயிகள் செய்யவில்லை
அமைதியான போராட்டத்திற்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் கிடையாது. ஆனால் சிலர் டேங்கர் லாரிகளுக்கு தீ வைத்துள்ளனர். விவசாயிகள் ஒருபோதும் இதுபோன்ற தவறுகளை செய்ததில்லை.
விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப்பெறப்படும். ஆனால் விவசாயிகள் அல்லாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
Related Tags :
Next Story