மாநில அந்தஸ்து கோரிக்கைக்காக புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் 23-ந்தேதி டெல்லி பயணம்


மாநில அந்தஸ்து கோரிக்கைக்காக புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் 23-ந்தேதி டெல்லி பயணம்
x
தினத்தந்தி 19 July 2018 4:08 AM IST (Updated: 19 July 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேச திட்டமிட்டு வருகிற 23-ந்தேதி புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் 30 பேரும் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்கள்.

புதுச்சேரி,


புதுவை யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி வந்தது முதல் கவர்னர் கிரண்பெடிக்கும் அமைச்சரவைக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. அரசின் திட்டங்களுக்கு கவர்னர் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்தபின் கவர்னருக்கு நிர்வாகத்தில் தலையிட உரிமையில்லை என்றும் தெரிவித்தனர். இதற்கிடையே டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.


அரசியல் சாசன அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். ஆனால் டெல்லிக்கான சட்ட விதிகள் வேறு. எனவே இது புதுச்சேரிக்கு பொருந்தாது என கவர்னர் கிரண்பெடி கருத்து தெரிவித்தார்.

இந்தநிலையில் தமிழ் தெரியாதவரை கலெக்டராக நியமித்தது தொடர்பான விவகாரம் புதுவை சட்டசபையில் வெடித்தது. நிர்வாகத்தில் கவர்னரின் தலையீடு இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் சட்ட சபையை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக டெல்லி சென்று பிரதமர் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களை சந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


அதேபோல் புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மாநில அந்தஸ்து கேட்டு டெல்லி செல்வதாக இருந்தால் தாங்களும் வருவதாக தெரிவித்தனர். இதையொட்டி சட்டசபை நிகழ்வுகளை இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவு செய்வது என முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே வருகிற 27-ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தல் காரணமாக முதல்-அமைச்சர் நாராயணசாமியின் நிலைப்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, மாநில அந்தஸ்து தேவையில்லை. சிறப்பு மாநில அந்தஸ்துதான் வேண்டும். ராகுல்காந்தி பிரதமர் ஆனால் இந்த உரிமை நிலைநாட்டப்படும் என்று கூறி வந்தார். ஆனால் தற்போது சிறப்பு மாநில அந்தஸ்து என்பதை விடுத்து மாநில அந்தஸ்து என்ற நிலைக்கு அவர் வந்துள்ளார்.

இந்த கோரிக்கைக்காக டெல்லி சென்று பிரதமர், உள்துறை மந்திரி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சந்திப்பது என முடிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து வருகிற 23-ந்தேதி 30 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி பயணம் மேற்கொள்கிறார்கள்.


இதுதொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமி நேற்று சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்து அழைப்பு கடிதங்களை வழங்கினார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கான கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர், உள்துறை மந்திரி, நிதித்துறை மந்திரி மற்றும் தேசிய கட்சி தலைவர்களையும் சந்திக்க எம்.எல்.ஏ.க்கள் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளோம். டெல்லியில் தலைவர்களை சந்திக்கும் தேதி வருகிற 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஆகும். இதில் தாங்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story