செக் மோசடி வழக்குகளில் தலைமறைவாக இருந்த 15 பேர் கைது


செக் மோசடி வழக்குகளில் தலைமறைவாக இருந்த 15 பேர் கைது
x
தினத்தந்தி 18 July 2018 10:59 PM GMT (Updated: 18 July 2018 10:59 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் செக் மோசடி வழக்குகளில் தலைமறைவாக இருந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,


ஈரோடு மாவட்டத்தில் செக் மோசடி வழக்குகளில் தீர்ப்பு கூறப்பட்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்காமல் பலர் தலைமறைவாக இருந்தனர். அவர்களை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டும் தலைமறைவாக இருப்பவர்களை கைது செய்ய ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி என்.உமாமகேஸ்வரி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் அதிரடி நடவடிக்கை எடுத்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணைக்கோட்டங்களிலும் அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து செக் மோசடி வழக்குகளில் தலைமறைவாக இருந்த 15 பேரை கண்டறிந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் அந்தந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட கோர்ட்டுகளில் ஆஜர் படுத்தினார்கள். 13 பேர் ஈரோடு கோர்ட்டிலும், 2 பேர் கோபி கோர்ட்டிலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதில் 8 பேருக்கு கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 8 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 7 பேரின் பிடிவாரண்டுகளை கோர்ட்டு உத்தரவுப்படி திரும்ப பெறப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டத்தில் செக் மோசடி வழக்கில் பிடிவாரண்டு பிறப்பித்தும் தலைமறைவாக உள்ள அத்தனை பேரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்.

அனைவரும் விரைவில் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள்” என்று கூறி உள்ளார். 

Next Story