ஈரோடு வ.உ.சி. பூங்காவில் காதலர்களை வெளியேறும்படி கூறியவருக்கு தர்மஅடி


ஈரோடு வ.உ.சி. பூங்காவில் காதலர்களை வெளியேறும்படி கூறியவருக்கு தர்மஅடி
x
தினத்தந்தி 18 July 2018 11:09 PM GMT (Updated: 18 July 2018 11:09 PM GMT)

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் காதலர்களை வெளியேறும்படி கூறியவரை மோட்டார் சைக்கிள்களில் துரத்தி சென்று சிலர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,


ஈரோடு வ.உ.சி. பூங்காவிற்கு தினமும் ஏராளமான காதலர்கள் வந்து செல்கிறார்கள். நேற்று மாலையில் ஒருவர் வ.உ.சி. பூங்காவிற்குள் நுழைந்தார். அவர் தன்னை மாநகராட்சி ஊழியர் என்று கூறிக்கொண்டு, பூங்காவிற்குள் மாலை நேரத்திற்கு பிறகு காதலர்கள் இருக்க அனுமதி கிடையாது என்றார். மேலும், காதலர்களை உடனடியாக வெளியேறும்படி கண்டித்தார். இதனால் காதல் ஜோடிகள் பூங்காவின் காவலர்களிடம் புகார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த நபரிடம் அவர்கள் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், சேலம் மாவட்டம் எடப்பாடி பக்கராடு பகுதியை சேர்ந்த ராமன் (வயது 44) என்பது தெரியவந்தது. அங்கு திரண்டு நின்றிருந்த பொதுமக்களும் அவரை கண்டித்து அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் அவரும் அங்கிருந்து பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்றுகொண்டு இருந்தார்.

பூங்கா முன்பு நின்றிருந்த சிலர் மோட்டார் சைக்கிள்களில் ராமனை துரத்தி சென்றனர். பின்னர் வ.உ.சி. பூங்கா மைதானத்தின் நுழைவு வாயில் பகுதியில் ராமனை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ராமன் அங்கிருந்து மீண்டும் வ.உ.சி. பூங்காவை நோக்கி ஓடினார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் ராமனை மீட்டு விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை வீட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

Next Story