புதுவை அருகே பரபரப்பு: சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் 7 பேருக்கு வலைவீச்சு
புதுவை அருகே சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 7 பேரை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி நகர பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இதற்காக அவர் தினமும் பஸ்சில் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் வழுதாவூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை அந்த வாலிபர் வழுதாவூரை ஒட்டியுள்ள ஒரு தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவரை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதை செல்போனிலும் அந்த வாலிபர் படம் எடுத்து வைத்துக் கொண்டதாக தெரிகிறது. இதன்பின் ஆபாச படத்தை காட்டி மிரட்டி பலமுறை அந்த சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதுமட்டுமின்றி அந்த சிறுமியை அருகில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கி உள்ளார். 6 பேர் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த கொடுமை குறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்து அந்த சிறுமி கதறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து குழுவின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தாவிடம் ராஜேந்திரன் புகார் செய்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி திருக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு அவர் உத்தரவிட்டார். மேலும் அந்த சிறுமியின் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கவும் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த சிறுமியின் வீட்டிற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மொத்தம் 7 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பாலியல் பலாத்கார விவகாரம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story