ஈரோட்டில் மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது


ஈரோட்டில் மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
x
தினத்தந்தி 18 July 2018 11:20 PM GMT (Updated: 18 July 2018 11:20 PM GMT)

ஈரோட்டில், மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு,

ஈரோடு பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண் ஒருவர் கடந்த 10-ந் தேதி வெளியில் சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் இதுபற்றி ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அந்த மைனர் பெண் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்துள்ளார். அப்போது அதே மில்லில் வேலை பார்த்த தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் மாறி, ஆசை வார்த்தை கூறி சம்பவத்தன்று அந்த வாலிபர் மைனர் பெண்ணை தன்னுடன் அழைத்துச்சென்று திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து 2 பேரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் வாலிபரும், மைனர் பெண்ணும் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பாலக்கோடு அருகே உள்ள சக்கிலிநாதம் பிக்கிலி கிராமத்தில் தங்கி இருந்த அந்த வாலிபரை கைது செய்ததுடன், அவருடன் இருந்த மைனர் பெண்ணை மீட்டு, ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த வாலிபர் ஆசை வார்த்தை கூறி மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


Next Story