சிறப்புக் கூறு நிதி விவகாரம்: சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா
சிறப்புக்கூறு நிதி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் நேற்று பூஜ்ய நேரத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-
அன்பழகன்: தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சிறப்புக்கூறு நிதி 16 சதவீதம் ஒதுக்கப்படவில்லை. இதற்கு யார் காரணம்? இதன் மீது நடவடிக்கை எடுங்கள். இதற்கு பதில் சொல்லிவிட்டு சபையை நடத்துங்கள்.
இவ்வாறு கூறிவிட்டு அன்பழகன் எம்.எல்.ஏ. தனது கட்சி சக எம்.எல்.ஏ.க்களான அசனா, வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகியோருடன் சபாநாயகர் இருக்கை முன்பு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரது இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவும் செய்தனர். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்-அமைச்சர் நாராயணசாமி: முதலில் நீங்கள் உங்கள் இருக்கையில் சென்று அமருங்கள் நான் பதில் சொல்கிறேன்.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் இருக்கையில் வந்து அமர்ந்தனர்.
நாராயணசாமி: ஆதிதிராவிட மக்களுக்கு 16 சதவீதம் சிறப்புக்கூறு நிதி ஒதுக்குவது நடைமுறை. கடந்த வருடம் இதுதொடர்பாக பட்ஜெட்டில் தனியாக குறிப்பிட்டோம். இந்த வருடம் அட்டவணை இன மக்களுக்கான தொகை முழுவதையும் செலவு செய்வோம். எதையும் நிறுத்தமாட்டோம். பட்ஜெட்டில் ரூ.304 கோடி துறையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் அனைத்தும் அந்த துறை மூலமே செலவிடப்படும்.
அமைச்சர் கந்தசாமி: நிதித்துறை செயலாளர் அதை பட்ஜெட்டில் சேர்க்கவில்லை. இதுதான் பிரச்சினை. இதற்கு முடிவு இல்லாவிட்டால் என்ன அர்த்தம்? அரசு செயலாளருக்குத்தான் அதிகாரம் என்பது எந்தவிதத்தில் நியாயம்?
வையாபுரி மணிகண்டன்: பட்ஜெட் உரையில் சிறப்புக்கூறு நிதி தொடர்பான விளக்கங்களை நீக்கியது யாரை அவமதிக்கும் செயல்? இதன் மீது நடவடிக்கை என்ன?
நாராயணசாமி: பொதுப்பணி, கல்வி, மின்சாரம் என பல்வேறு துறைகளிலும் சிறப்புக்கூறு திட்டத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளோம். அந்த நிதியை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செலவிடுவோம்.
அன்பழகன்: சிறப்புக்கூறு நிதியாக குறைந்தது ரூ.1000 கோடி ஒதுக்கி இருக்கவேண்டும். அமைச்சரை கேட்டால் நிதித்துறை செயலாளரை குறை கூறுகிறார். நீங்களும் நிதித்துறை செயலாளருக்காக பேசுகிறீர்கள். உங்களுக்கு ஆதிதிராவிட மக்கள் மீது அக்கறை இல்லை. இதைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
(இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகியோர் வெளியேறினர்.)
விஜயவேணி, தீப்பாய்ந்தான் (காங்): இந்த பிரச்சினை முதலில் வந்தபோதே நிதித்துறை செயலாளரை அழைத்து பேசி இருக்கலாம். கடந்த வருடம் சிறப்புக்கூறு நிதி ரூ.37 கோடி செலவிடப்படவில்லை.
அமைச்சர் கந்தசாமி (காங்): நிதித்துறை செயலாளரின் தவறால் இந்த பிரச்சினை எழுந்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
Related Tags :
Next Story