‘தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது’ கனிமொழி எம்.பி. பேச்சு


‘தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது’ கனிமொழி எம்.பி. பேச்சு
x

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது என்று திருக்கோவிலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

திருக்கோவிலூர்,

தி.மு.க. தலைவர் கருணா நிதியின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்றது. இதற்கு பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் தங்கம், விஸ்வநாதன், ரவிச்சந்திரன், பிரபு, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ், தொகுதி பொறுப்பாளர் டி.என்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூராட்சி தலைவர் தேவிமுருகன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் உமாமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

முற்போக்கு சிந்தனையை கொண்ட கருணாநிதி தமிழையும், தமிழர்களையும் முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றார். நீட் தேர்வை எதிர்த்தவர் கருணாநிதி. ஆனால் இன்று என்ன நிலை என்று எண்ணிப்பார்க்க வேண்டும். நீட் தேர்வால் நமது மாநில பிள்ளைகளின் படிப்பு உரிமை போகின்றதே என்ற சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் பினாமி அரசாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகின்றது. மாநில உரிமை பறிபோவது குறித்து எதிர்த்து பேசக்கூட அவர்களுக்கு துணிவு இல்லை. ஓ.பன்னீர்செல்வத்தை போன்று எடப்பாடி பழனிசாமியும் விரைவில் தியானத்தில் ஈடுபடுவார்.

8 வழிச்சாலை தொடர்பான கள அறிக்கை முற்றிலும் பொய்யானது ஆகும். இதில் எத்தனை பேரின் வாழ்வாதாரம், விவசாயம் பாதிக்கும் என்ற நிலையை இந்த அரசு உணரவில்லை. இந்த திட்டம் தொடர்பாக மக்களை சந்திக்க செல்லும் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்களை கைது செய்து அடக்குமுறையை கையாளுகின்றனர். ஒரு திட்டத்தை கொண்டு வரும் முன், அதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் அதை செயல்படுத்த வேண்டும். ஆனால் இதில் கருத்து கேட்டதாக கூறுகிறார்கள், அதுபற்றிய தெளிவான அறிக்கை இல்லை. அதாவது யார்? யாரை சந்தித்து, எந்தெந்த அதிகாரிகள் பேசினார்கள் என்ற விவரங்கள் சரியாக இல்லை. எனவே அந்த அறிக்கை முற்றிலும் பொய்யானது ஆகும்.

குடிநீர், சுகாதாரம், மண் வளம் போன்ற உரிமைகள் குறித்து பேசுவது மக்களின் ஜனநாயகம். அதற்கு அரசு நடவடிக்கை எடுத்து எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதிபடுத்த வேண்டுமே தவிர, இப்படி அடக்குமுறையால் மக்களை ஒடுக்க நினைக்கும் இந்த அராஜக அரசை மக்கள் இனியும் அனுமதிக்கமாட்டார்கள்.

தமிழகத்தில் பா.ஜனதா தேவையில்லாமல் தலையிடுகின்றது. உரிமை கேட்டு போராடுபவர்களை சமூக விரோதிகள் என்கின்றது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், மத்தியில் ஆளும் பா.ஜனதாவினரும் தமிழகத்தில் தீவிரவாதம் தோன்றியிருப்பதாக பேசுகின்றனர். ஆட்சி பொறுப்பில் இருக்கும் அவர்களுக்கு தீவிரவாதிகள் யார்? யார்? என்று தெரியாதா. அதனை அவர்கள் அறிவிக்க வேண்டும்.

எனக்கு தெரிந்தவரை ஆர்.எஸ்.எஸ்-ம், பா.ஜனதாவும் தான் தீவிரவாதம் என்பேன். தமிழகத்தில் தீவிரவாதம் என்ற ஒரு பொய்யான வதந்தியை பரப்பிவிட்டு அடக்கு முறையில் ஈடுபடுவதுடன், மக்களை அச்சத்திற்கு உள்ளாக்குகின்றனர். பெரியார் வாழ்ந்த இந்த மண் யாருக்கும் பயப்படாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. சத்துணவு, முட்டை, பருப்பு என பள்ளி குழந்தைகளுக்கு வழங்கும் உணவில் கூட ஊழல் செய்யும் இந்த ஆட்சியை மக்கள் ஓட, ஓட விரட்டியடிப்பார்கள். அதேசமயம் விரைவில் தமிழகம் தலைநிமிர தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். அப்போது தான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். எனவே செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ஆயிரம் பெண்களுக்கு கனிமொழி எம்.பி. சேலை வழங்கினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன், நகர செயலாளர்கள் ஆர்.கோபி, சுந்தரமூர்த்தி, சிவா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் எஸ்.அன்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் டி.குணா, தொழிலதிபர் ஜூடியாக் தியாகு, முன்னாள் கவுன்சிலர்கள் கோபு, தங்கராஜ், கலைவாணி சக்திவேல், கோவிந்த், ராகவேந்திரா ஜூவல்லரி உரிமையாளர் முரளி, என்.கே.வி.போஸ்டர்ஸ் நிர்வாகி ஆதிநாராயணமூர்த்தி, ஸ்ரீதரன் பிரஸ் நிர்வாகி துரை என்கிற துரைராஜன், தொ.மு.ச. நிர்வாகி சரவணன், வக்கீல் அணி நிர்வாகிகள் ஆதன்ரவி, நகர இளைஞரணி அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன், நிர்வாகி கலைச்செல்வன், சோபாண்டியபுரம் கே.ஆர்.பி.பிரகாஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் தேன்மொழி நன்றி கூறினார். 

Next Story