மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் திரளான மாணவ– மாணவிகள் பங்கேற்பு


மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் திரளான மாணவ– மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 July 2018 4:15 AM IST (Updated: 19 July 2018 9:48 PM IST)
t-max-icont-min-icon

மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் திரளான மாணவ– மாணவிகள் பங்கேற்றனர்.

கரூர்,

தமிழ்நாடு என பெயர்சூட்டப்பட்டு 50 ஆண்டு ஆவதை கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் நேற்று காலை கரூர் விளையாட்டரங்கில் நடந்தது. இந்த போட்டிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர், கரூரில் விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட விளையாட்டு விடுதி அமைக்க தீவரமாக ஏற்பாடு நடந்து வருகிறது. இது பயனுள்ளதாக இருக்கும். விளையாட்டு துறையில் சாதிப்பதன் மூலம் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை பெற முடியும் என்று கூறினார். இந்த தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அதிகாரி சாந்தி, வட்டாட்சியர் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அதனை தொடர்ந்து 100 மீட்டர் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய தடகள போட்டிகள் மாணவ– மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன. இதில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 21 வயதுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர்கள் மணிமாறன், அண்ணாதுரை, மகாமுனி உள்ளிட்டோர் நடுவர்களாக செயல்பட்டு போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர். மாவட்ட அளவிலான போட்டியில் முதன் 3 இடம் பெறுபவர்களுக்கு முறையே ரூ.2,500, ரூ.1,500, ரூ.1,000 பரிசாக வழங்கப்படுகிறது. இதில் முதல் இரண்டு இடம் பிடித்தவர்கள் சென்னையில் வருகிற 23–ந் தேதி நடைபெறுகிற மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதில் முதல் 3 இடம் பிடித்து வெற்றி பெறுபவர்களுக்கு தலா 4 கிராம் தங்க பதக்கத்துடன் முறையே ரூ.50,000, ரூ.25,000, ரூ.15,000 என முதல்–அமைச்சரிடமிருந்து நேரடியாக பரிசு வழங்கப்படுகிறது.

Next Story