பர்கூர் மலைக்கிராமத்தில் ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்


பர்கூர் மலைக்கிராமத்தில் ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்
x
தினத்தந்தி 20 July 2018 3:30 AM IST (Updated: 19 July 2018 11:59 PM IST)
t-max-icont-min-icon

பர்கூர் மலைக்கிராமத்தில் அட்டகாசம் செய்த ஒற்றை யானை மீண்டும் மரவள்ளிக்கிழங்கு தோட்டத்துக்குள் புகுந்தது.

அந்தியூர்,

பர்கூர் மலைப்பகுதியில் யானை, மான், சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியையொட்டிய மலைக்கிராமத்தில் யானைகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 17-ந்தேதி இரவு வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை வெளியேறியது. துருசனாம்பாளையம் மலைக்கிராமத்தில் புகுந்த இந்த யானை அந்த ஊரைச்சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர் வீட்டின் மேற்கூரையை உடைத்து அங்கு குவிக்கப்பட்டு இருந்த பலாப்பழங்களை தின்றது. பின்னர் காட்டுக்குள் சென்றுவிட்டது.

இந்தநிலையில் அதே ஒற்றை ஆண் யானை நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வனப்பகுதியைவிட்டு வெளியேறியது. இந்த யானை பர்கூர் மலைப்பகுதியையொட்டியுள்ள துருசனாம்பாளையம் கிராமத்துக்குள் மீண்டும் புகுந்தது. கிராமத்துக்குள் யானை நின்றதை பார்த்த பொதுமக்கள் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் அந்த ஒற்றை யானை மாதன் என்பவருடைய விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது.

தற்போது மாதன் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் ஒரு ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து உள்ளார். அந்த மரவள்ளிக்கிழங்கு செடிகளை ஒற்றை யானை காலால் மிதித்தும், தின்றும் நாசம் செய்தது. விவசாயிகள் தகர டப்பாக்கள் மூலம் ஒலி எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி அளவில் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் அந்த யானை மீண்டும் மாதன் தோட்டத்துக்கு வந்தது. பின்னர் மரவள்ளிக்கிழங்குசெடிகளை தின்று நாசம் செய்து கொண்டு இருந்தது. இதனை பார்த்த விவசாயிகள் இதுகுறித்து பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து பர்கூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வனத்துறையினர் விவசாயிகள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்து அந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பர்கூர் மலைப்பகுதிக்கு உள்பட்ட துருசனாம்பாளையம் கிராமத்துக்குள் கடந்த 17-ந்தேதி இரவு ஒற்றை யானை புகுந்தது. பின்னர் மாதேஸ்வரன் என்பவருடைய வீட்டின் ஓடுகளை உடைத்து, அங்கு வைக்கப்பட்டு இருந்த பலாப்பழங்களை தின்றது. இந்தநிலையில் அந்த ஒற்றை ஆண் யானை மீண்டும் நேற்று இரவு (நேற்று முன்தினம் இரவு) மாதன் என்பவருடைய தோட்டத்துக்குள் புகுந்து மரவள்ளிக்கிழங்குகளை நாசம் செய்து உள்ளது.

ஒற்றை யானை கிராமப்பகுதிக்குள் புகுந்துவிடுவதால் நாங்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த அச்சத்தில் உள்ளோம். எனவே வனத்துறையினர் ஒற்றை யானை கிராமப்பகுதிக்குள் புகாத வகையில் அகழி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Next Story