பவானி அருகே காலிங்கராயன் அணை பாசனத்துக்கு திறப்பு


பவானி அருகே காலிங்கராயன் அணை பாசனத்துக்கு திறப்பு
x
தினத்தந்தி 19 July 2018 10:30 PM GMT (Updated: 19 July 2018 6:38 PM GMT)

பவானி அருகே காலிங்கராயன் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் கலெக்டர், எம்.எல்.ஏ.க் கள் கலந்துகொண்டனர்.

பவானி,

பவானி அருகே காலிங்கராயன் பாளையத்தில் உள்ள காலிங்கராயன் தடுப்பணையில் இருந்து பாசன பகுதிகளுக்கு திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காலிங் கராயன் அணையில் இருந்து 19-ந் தேதி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டு மதகுகளை இயக்கி தண்ணீரை திறந்து விட்டனர். பின்னர் அவர்கள், திறந்து விடப்பட்ட தண்ணீரில் பூக்கள் தூவினார்கள்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காலிங்கராயன் வாய்க்காலில் இன்று (நேற்று) முதல் முறைவைத்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. வருகிற நவம்பர் மாதம் 15-ந்தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும். இதில் 80 நாட்கள் தொடர்ந்தும், 40 நாட்கள் நிறுத்தம் செய்தும் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். எனவே விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாய பணிகளை செய்ய வேண்டும்’ என்றனர்.

நிகழ்ச்சியில், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, செயற்பொறியாளர் வி.தாமோதரன், உதவி செயற்பொறியாளர் எஸ்.செந்தில்குமார், இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், ஈரோடு ஒன்றிய அ.தி.மு.க. தலைவர் பூவேந்திரகுமார், சித்தோடு பேரூராட்சி முன்னாள் தலைவர் வரதராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story