திருச்சியில் காங்கிரசார் கோஷ்டி மோதல் ஒருவரையொருவர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு


திருச்சியில் காங்கிரசார் கோஷ்டி மோதல் ஒருவரையொருவர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 July 2018 4:45 AM IST (Updated: 20 July 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

வட்டார நிர்வாகிகள் நியமிக்கும் முன்பே கூட்டம் நடத்துவதா? என திருச்சியில் காங்கிரசார் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மலைக்கோட்டை,

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவில் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்கள் நடந்து வருகிறது. இதில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்று கூட்டத்தை நடத்தி வருகிறார். திருச்சியில் ஏற்கனவே மாநகர் மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டங்கள் நடந்து முடிந்து விட்டன. திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்னும் நடக்கவில்லை. தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக கோவிந்தராஜன் இருந்து வருகிறார். இவர் திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளர். நாளை (சனிக்கிழமை) தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டம் முடிந்ததும் மாநிலம் முழுவதும் புதிதாக வட்டார மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். புதிய நிர்வாகிகள் பதவி திருநாவுக்கரசர் ஆதரவாளர்களுக்கே வழங்கப்படுவதாகவும், பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாகவும் காங்கிரசார் குற்றம் சாட்டி வந்தனர். எனவே, உண்மையான காங்கிரஸ்காரர்களுக்கே பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாசல மன்றத்தில் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆர்.சி.பாபு, வட்டார தலைவர் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடப்பதாக அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், முன்னாள் மேயர் சுஜாதா, வக்கீல் பிரிவு மாநில துணை தலைவர் விஜயாபாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய மாவட்ட தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

காலை 10 மணிக்கு கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு ஏற்கனவே கூட்டம் நடத்தும் வகையில் இருக்கைகள், மைக் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதையறிந்த தற்போதைய மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், வடக்கு மாவட்ட தலைவர் கலை உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். பொறுப்பில் உள்ளவர்கள் இன்றி எப்படி மாவட்ட அலுவலகத்தில் தன்னிச்சையாக கூட்டம் நடத்தலாம்? என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வட்டார

நிர்வாகிகள் நியமிக்கப்படும் முன்பே கூட்டம் நடத்துவதா? என்றும் கேள்வி எழுப்பினர். இதனால், அங்கு ஒருவித அசாதாரண சூழல் நிலவியது.

இதையறிந்த கோட்டை போலீசார் ஏராளமானோர் காங்கிரஸ் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டனர். போலீஸ் உதவி கமிஷனர் பெரியண்ணன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னாள் நிர்வாகிகளிடம், “கூட்டம் நடத்த வேண்டாம். ஏதாவது பிரச்சினை ஆகி விட்டால் நாங்கள்தான் பதில் சொல்ல வேண்டியது வரும். எனவே, அனைவரும் கலைந்து செல்லுங்கள்” என்றனர்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகிகளான ஆர்.சி.பாபு, ஜெரோம் ஆரோக்கியராஜ் ஆகியோர்,“இது எங்களது கட்சி விவகாரம். அதில் போலீசார் தலையிட வேண்டியதில்லை. அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்” என்றனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாப்பு கருதிதான் இங்கு வந்துள்ளோம். தேவையில்லை என்றால் நாங்கள் அனைவரும் சென்று விடுகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால், ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு நீங்கள்தான் முழு பொறுப்பாவீர்கள் என இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தெரிவித்தார்.

அதே வேளையில் தற்போதைய காங்கிரஸ் தலைவர்களான கோவிந்தராஜன், கலை, ஜவகர் ஆகியோரும் தன்னிச்சையாக இங்கு கூட்டம் நடத்த விடமாட்டோம். வேறு எங்கு வேண்டுமானாலும் நடத்தி கொள்ளட்டும் என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திருநாவுக்கரசர் கோஷ்டி ஒருதரப்பாகவும், இளங்கோவன்-சிதம்பரம் கோஷ்டி ஒரு தரப்பாகவும் இருந்து கொண்டு குரல் எழுப்பினர். இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடுத்தபோது, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் திருநாவுக்கரசர் கோஷ்டியை சேர்ந்த வடக்கு மாவட்ட தலைவர் கலைக்கும், முன்னாள் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜிக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இருவரது ஆதரவாளர்களும் கடுமையான வார்த்தைகளால் பேசிக்கொண்டனர். இதனால், அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. மேலும் ஒருவரையொருவர் கோஷ்டியாக அடிக்க பாய்ந்தனர். நிலைமையை உணர்ந்த போலீசார் உள்ளே புகுந்து அனைவரையும் கைது செய்வதாக கூறி வெளியேறும்படி தெரிவித்தனர். கைது செய்து ஏற்றி செல்வதற்கு போலீஸ் வாகனமும் வரவழைக்கப்பட்டது.

இப்படி ஒருபுறம் மோதல் ஏற்பட்டு கொண்டிருக்க, முன்னாள் தலைவரான ஆர்.சி.பாபு அலுவலக வளாகத்தில் மைக்கை பிடித்து ஒலிபெருக்கியில் பேச தொடங்கினார். காங்கிரஸ் வட்டார தலைவர்கள் கூட்டம் நடப்பதால் நிர்வாகிகள் அனைவரும் உள்ளே வந்து அமருங்கள் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

போலீசார் உடனடியாக மைக்கில் பேசிய ஆர்.சி.பாபுவை வெளியேற்றி கைது செய்வதாக கூறினார்கள். அதைத்தொடர்ந்து கூட்டம் தொடங்கும் முன்பே ரத்து செய்யப்பட்டு அனைவரும் வெளியேறினார்கள். வெளியே வந்த காங்கிரசார் போலீசாரிடம், நாங்கள் அமைதியாக போய்விடுகிறோம். கைது நடவடிக்கை வேண்டாம் என்றனர். பின்னர் இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து பதற்றம் காரணமாக காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story