புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்


புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
x
தினத்தந்தி 20 July 2018 4:00 AM IST (Updated: 20 July 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி,

சட்டசபையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரும் அரசின் தீர்மானத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொண்டுவந்தார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

நாராயணசாமி: மத்திய அரசு புதுச்சேரி யூனியன் ஆட்சிபரப்புக்கு 70 சதவீதம் நிதியை மானியமாக வழங்கி வந்த நிலையில் படிப்படியாக தற்போது 25 சதவீதமாக குறைத்து விட்டது. ஆனால் அனைத்து மாநிலங்கள் 14-வது நிதிக்கமிஷனின் பரிந்துரையின்படி 42 சதவீத நிதி ஆதாரத்தை மத்திய அரசிடமிருந்து தற்போது பெற்று வருகின்றன.

புதுச்சேரி யூனியன் ஆட்சிபரப்பு இதுவரை மத்திய நிதிக்கமிஷன் வரம்பின் கீழ் கொண்டுவரப்படவில்லை. நிதிக்கமிஷனிலும் இல்லாமல் மானியங்களும் இல்லாத நிலையில் புதுச்சேரி தற்போது இருந்து வருகிறது. புதுச்சேரி யூனியன் ஆட்சிபரப்பை 15-வது நிதிக்கமிஷன் வரம்பின்கீழ் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை பொறுத்தவரையில் புதுச்சேரியை மாநிலங்களுக்கு இணையாக கருதி பிரித்து கொடுத்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் புதுச்சேரி ஆட்சிபரப்பானது மாநிலமாக மாறுவது தற்போது அவசியமான ஒன்றாகிறது.

புதுச்சேரி ஆட்சிபரப்பின் அமைச்சரவைக்கும், சட்டசபைக்கும் மற்ற மாநிலங்களில் உள்ளதுபோன்ற அதிகாரங்கள், மக்களுக்கு பயனளிக்கக் கூடிய நலத்திட்டங்கள், துறைமுகம், தொழில், விவசாயம், கடல் வளத்தை மேம்படுத்துதல், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், நிதியாதாரத்தை பெருக்குதல், வளர்ச்சி திட்டங்களை தங்கு தடையின்றி நிறைவேற்றுதல் போன்ற பல திட்டங்களை தங்குதடையின்றி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை உடனடியாக காலதாமதமின்றி வழங்கிட மத்திய அரசை சட்டபேரவை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

என்.எஸ்.ஜே.ஜெயபால் (என்.ஆர்.காங்): மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டு 11 முறை தீர்மானம் போட்டுள்ளோம். பாராளுமன்றத்திலும் முன்பு அ.தி.மு.க. எம்.பி.க்கள் பேசினார்கள். இப்போது அமைச்சரவைக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. ஆலோசனை செல்லும் ஆட்சிமன்ற குழுபோன்றுதான் உள்ளோம். எங்கள் கட்சியின் கொள்கையே தனிமாநில அந்தஸ்து பெறுவதுதான். இதற்காக மாநாடு நடத்தினோம். நம்மிடையே இருவேறு கருத்து இருந்து இப்போதுதான் முடிவுக்கு வந்துள்ளோம். இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

சிவா (தி.மு.க.): புதுச்சேரி விடுதலை பெற்றபோது மாநிலமாக இருந்தது. இப்போது பல்வேறு சூழ்நிலைகளால் சில பிரச்சினைகள் வந்துள்ளன. முன்பு புதுவைக்கு வந்த கவர்னர்கள் ஜனநாயகத்தை மதித்து ஆட்சியாளர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். சிலர் தங்களுக்குத்தான் வானளாவிய அதிகாரம் என்று நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். கடந்த 1996-ம் ஆண்டு தி.மு.க.வில் ஜானகிராமன் முதல்-அமைச்சராக இருந்தபோது மாநில அந்தஸ்து பெற அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் டெல்லிக்கு அழைத்து சென்று முயற்சி செய்தார்கள். ஆனால் பலன் கிடைக்கவில்லை. சுஷ்மா சுவராஜ் தலைமையிலான நிலைக்குழுவும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க சாத்தியக்கூறு இருப்பதாக கூறியது.

அமைச்சர் நமச்சிவாயம்: பலமுறை இதே தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளோம். அந்த தீர்மானங்கள் முறையாக மத்திய அரசுக்கு சென்று சேர்ந்ததா? என்று தெரியவில்லை. தனிமாநில அந்தஸ்து, சிறப்பு மாநில அந்தஸ்து என்ற கருத்துகள் இருந்தாலும் கட்சி பாகுபாடு இல்லாமல் இப்போது மாநில வளர்ச்சிக்காக தனிமாநில அந்தஸ்து என்ற கோஷத்தை முன்னெடுத்து உள்ளோம்.

வருகிற திங்கட்கிழமை பிரதமர், உள்துறை மந்திரியை சந்திக்க முதல்-அமைச்சர் ஏற்பாடு செய்து வருகிறார். இந்த பயணத்தில் எதிர்க்கட்சி தலைவரும் கலந்துகொள்ள வேண்டும். அரசியல் சட்ட இடர்பாடுகளை தீர்க்க அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

அன்பழகன் (அ.தி.மு.க.): இந்த சட்டமன்றத்தில் 10 முறைக்கு மேல் மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் அதை கொடுத்து இருக்கலாம். இப்போது பெற்ற சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கும் வகையில் நிர்வாகத்தின் நிலை உள்ளது. மாநிலத்தின் நிர்வாகி (கவர்னர்) தினந்தோறும் பிரச்சினைகளை உருவாக்குகிறார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஜெயலலிதாவின் முயற்சியினால் நமக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் நிலை உருவானது. ஆனால் ஆட்சிமாற்றம் காரணமாக கிடைக்கவில்லை. இந்த தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்கிறது. இதற்காக பிரதமர், மத்திய மந்திரிகளை சந்திக்க நாங்களும் டெல்லி வருகிறோம்.

இதைத்தொடர்ந்து தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விட்ட சபாநாயகர் வைத்திலிங்கம் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக அறிவித்தார்.

Next Story