காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 July 2018 3:30 AM IST (Updated: 20 July 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

சிறுபாக்கம் அருகே குடிநீர் வினியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுபாக்கம், 

சிறுபாக்கம் அருகே மங்களூர் ஊராட்சியில் உள்ள வடக்கு காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றி குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதி மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் அவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், காலி குடங்களுடன் அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கும் விளைநிலங்களுக்கும் சென்று குடிநீர் பிடித்து வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் காலனி பகுதியில் உள்ள தெரு விளக்குகளும் எரியாமல் கிடப்பதால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து அவர்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலையில் திட்டக்குடி-சிறுபாக்கம் சாலையில் காலனி பகுதியில் காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர். பின்னர் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும், எரியாத தெருவிளக்குகளை சரிசெய்து தரக்கோரியும் கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story