தபால்நிலையங்களில் செயல்படும் பாஸ்போர்ட் சேவை மையத்தில் 8 ஆயிரம் பேர் விண்ணப்பம்


தபால்நிலையங்களில் செயல்படும் பாஸ்போர்ட் சேவை மையத்தில் 8 ஆயிரம் பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 20 July 2018 4:15 AM IST (Updated: 20 July 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

தபால் நிலையங்களில் செயல்படும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் மூலம் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று தென்மண்டல தபால் துறைத்தலைவர் வென்னம் உபேந்தர் தெரிவித்தார்.


மதுரை,

இந்திய தபால்துறை, வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து பாஸ்போர்ட் சேவை மையங்களை அமைத்துள்ளது. இதற்காக குறிப்பிட்ட தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதுரையில் உள்ள தென்மண்டல தபால்துறைத்தலைவர் வென்னம் உபேந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்மண்டல தபால்துறையின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்கள் உள்ளன. தபால் நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கான பல்வேறு சேவைகளை தபால்துறை வழங்கி வருகிறது.


அதனை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் நாகர்கோவில் மற்றும் விருதுநகர் தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மே மாதம் தேவகோட்டை மற்றும் கொடைரோடு தலைமை தபால் நிலையங்களில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் தற்போது வரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த சேவை விரைவில் தென்மண்டலம் முழுவதிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை விடுமுறை நாட்களை தவிர சம்பந்தப்பட்ட தபால் அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story