பாளையங்கோட்டையில் தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகை ‘அபேஸ்’ சாமியார் போல் வேடம் அணிந்து வந்தவர்கள் கைவரிசை


பாளையங்கோட்டையில்  தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகை ‘அபேஸ்’ சாமியார் போல் வேடம் அணிந்து வந்தவர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 20 July 2018 2:45 AM IST (Updated: 20 July 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

சாமியார் போல் வேடம் அணிந்து வந்தவர்கள், தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகை ‘அபேஸ்’ செய்து சென்று விட்டனர்.

நெல்லை, 

சாமியார் போல் வேடம் அணிந்து வந்தவர்கள், தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகை ‘அபேஸ்’ செய்து சென்று விட்டனர்.

பாளையங்கோட்டையில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தோஷம் கழிப்பு

பாளையங்கோட்டை புதுப்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி வள்ளி (வயது 40). நேற்று மதியம் வள்ளி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காவி வேட்டி கட்டி சாமியார் வேடத்தில் 3 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வள்ளியிடம், ‘உங்களுக்கும், உங்களது குடும்பத்துக்கும் தோஷம் உள்ளது. அந்த தோஷத்தை கழிக்க வேண்டும். அப்போதுதான் குடும்பம் முன்னேற்றம் அடையும்’ என்று கூறினர்.

ஆனால் வள்ளி தோஷம் கழிக்க வேண்டாம் என்று கூறினார். இருப்பினும் அவர்கள், ‘ரூ.500 மட்டும் கொடுங்கள். தோஷத்தை நிவர்த்தி செய்து விடுகிறோம்‘ என்று தொடர்ந்து வற்புறுத்தினர். இதனால் வேறு வழியில்லாமல் வள்ளி தோஷம் கழிக்க சம்மதம் தெரிவித்தார்.

1½ பவுன் தங்க சங்கிலி

இதையடுத்து அவர்களிடம் ஒரு சொம்பில் தண்ணீரும், ரூ.500 காணிக்கையாகவும் வள்ளி கொடுத்தார். அப்போது அவரிடம், ‘நீங்கள் அணிந்து உள்ள தங்க நகையை சொம்பில் போடுங்கள். அதன்மூலம் தோஷத்தை கழித்த பிறகு அந்த நகையை நீங்கள் அணிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினர். இதை நம்பிய வள்ளி, தான் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை கழற்றி சொம்புக்குள் போட்டார்.

பின்னர், ‘நீங்கள் குளித்து விட்டு வாருங்கள். நாங்கள் பரிகாரத்தை செய்கிறோம்’என்று கூறினர். மேலும் ஒரு வாரம் கழித்துதான் சொம்புக்குள் போட்டிருக்கும் நகையை எடுத்து பார்க்க வேண்டும் என்றும் கூறினர்.

அபேஸ்

இதையடுத்து வள்ளி வீட்டுக்குள் குளிக்க சென்ற நேரத்தில் போலி சாமியார்கள் சொம்புக்குள் போட்டிருந்த நகையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த வள்ளி, அவர்கள் அங்கிருந்து மாயமாகிவிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் சொம்புக்குள் பார்த்தபோது, நகை காணாமல் போனது தெரியவந்தது.

அதன்பிறகே சாமியார் வேடத்தில் வந்தவர்கள் நகையை ‘அபேஸ்’ செய்ததை அவர் உணர்ந்தார். உடனே அவர் வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தார். ஆனால் அதற்குள் அவர்கள் மாயமாகி விட்டனர்.

வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சாமியார் போல் வேடம் அணிந்து வந்து நகை ‘அபேஸ்’ செய்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

நேற்று பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story