திருவண்ணாமலையில் ரஷிய பெண் பலாத்கார வழக்கில் அண்ணன்- தம்பி உள்பட 4 பேர் கைது
திருவண்ணாமலையில் ரஷிய பெண் பலாத்கார வழக்கில் அண்ணன்- தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரஷிய பெண்ணிடம் ரகசிய வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார்.
திருவண்ணாமலை,
ரஷிய நாட்டை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண் கடந்த 12-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்து செங்கம் சாலையில் உள்ள கஸ்தூரி நகரில், தனியாருக்கு சொந்தமான அபார்ட்மெண்டில் அறை எடுத்து தங்கி உள்ளார். கடந்த 14-ந் தேதி விடுதி அறைக்குள் சென்றவர் வெளியே வரவில்லை. 16-ந் தேதி காலை சந்தேகம் அடைந்த விடுதியின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அந்த அறையின் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவர் படுகாயம் அடைந்து அலங்கோலமான நிலையில் சுயநினைவின்றி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். பின்னர் அன்று இரவு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ரஷிய பெண் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ரஷிய பெண் தங்கி இருந்த அபார்ட்மெண்டை திருவண்ணாமலை அருகில் உள்ள வேடநத்தம் பகுதியை சேர்ந்த பாரதி (வயது 31) என்பவர் ஒப்பந்தத்திற்கு எடுத்து அனுமதியில்லாமல் விடுதி நடத்தி வந்துள்ளார். அதே அபார்ட்மெண்டில் 5-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்கி உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் பாரதியிடம் விசாரணை நடத்தினர். மேலும் ரஷிய பெண் பலாத்கார சம்பவத்தில் போலீசாருக்கு பாரதி, அவரது அண்ணன் நீலகண்டன் (35), அவர்களின் கார் டிரைவர் வெங்கடேசன் (30) மற்றும் பாரதியின் நண்பர் மணிகண்டன் (37) ஆகியோர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் போலீசார் ரஷிய பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அவர் சுயநினைவின்றியும், அதிர்ச்சியிலும் இருந்ததால் எந்தவித தகவலையும் பெற முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
கடந்த 17-ந் தேதி மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட அந்த ரஷிய பெண்ணை பார்வையிட்டனர். ரஷிய நாட்டை சேர்ந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்து சென்றனர். ரஷிய நாட்டு தூதரக விசா சரிபார்ப்பு அதிகாரி டென்னிஸ் திருவண்ணாமலை மருத்துவமனைக்கு நேரில் வந்து அந்த பெண்ணை பார்வையிட்டு, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை சுயநினைவுக்கு திரும்பிய ரஷிய பெண்ணிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது வாக்குமூலத்தை கைப்பட எழுதி போலீசாரிடம் கொடுத்துள்ளார்.
மேலும் நேற்று மாலை ரஷிய பெண்ணிடம் ஆரணி கிளை கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு மகாலட்சுமி நடந்த சம்பவம் குறித்து ரகசிய வாக்குமூலம் பெற மருத்துவமனைக்கு 5.10 மணிக்கு வந்தார். அவர் சுமார் 2½ மணி நேரத்திற்கு மேல் அந்த பெண்ணிடம் ரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டார்.
இதையடுத்து இரவு 8 மணியளவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரஷிய இளம்பெண் சுற்றுலாவுக்காக கடந்த 3.6.2018 அன்று இந்தியாவுக்கு வந்துள்ளார். பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து கடந்த 10-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். முதலில் அவர் தங்கிருந்த அறைக்கு அதிக வாடகை வசூலித்ததால், மாற்று இடம் தேடியுள்ளார்.
இதையடுத்து அவர் விசாரித்து பாரதியின் அபார்ட்மெண்டிற்கு கடந்த 12-ந் தேதி சென்றார். பின்னர் கடந்த 16-ந் தேதி காலை 7.50 மணியளவில் மயக்க நிலையில் இருந்து அந்த பெண்ணை பாரதி மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து நான் மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற அபார்ட்மெண்டை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினோம். மேலும் சந்தேகத்தின் பேரில் நீலகண்டன், அவரது தம்பி பாரதி, மணிகண்டன், வெங்கடேசன் (30) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தோம்.
இந்த நிலையில் ரஷிய பெண் கொடுத்த ரகசிய வாக்குமூலத்தில் பாரதி என்பவர் தன்னை 2 முறை பலாத்காரம் செய்ததாகவும், மற்ற 3 பேர் தன்னை மானபங்கம் செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story