காசிமேட்டில் வரதட்சணை கேட்டு மனைவி மீது கொலைவெறி தாக்குதல் கணவர் கைது


காசிமேட்டில் வரதட்சணை கேட்டு மனைவி மீது கொலைவெறி தாக்குதல் கணவர் கைது
x
தினத்தந்தி 20 July 2018 4:00 AM IST (Updated: 20 July 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கேட்டு, குடிபோதையில் மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு திடீர்நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 30). மீனவர். இவருடைய மனைவி லட்சுமி(25). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கோவிந்தராஜ்க்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, திருமணத்துக்கு வரதட்சணையாக கொடுப்பதாக சொன்ன பணம், நகையை கேட்டு அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

கொலை வெறி தாக்குதல்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் கோவிந்தராஜ் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். பின்னர் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, அதை தனது மனைவியை வற்புறுத்தி குடிக்க செய்தார்.

இதையடுத்து வரதட்சணை கேட்டு அவரை இரும்பு கம்பியால் பலமாக தாக்கினார். இதனால் லட்சுமி, வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க டி.வி. சத்தத்தை அதிகமாக வைத்த கோவிந்தராஜ், மீண்டும் மனைவி மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டார்.

இதில் தலையிலும், உடலிலும் பலத்த காயம் அடைந்த லட்சுமி, சுய நினைவு இல்லாமல் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து கோவிந்தராஜ், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

போலீசில் புகார்

நேற்று காலை வெகுநேரம் ஆகியும் லட்சுமி வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருக்கவே சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், லட்சுமி வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுகாயங்களுடன் லட்சுமி சுய நினைவு இன்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுபற்றி லட்சுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அலறி அடித்து கொண்டு ஓடி வந்த அவருடைய தந்தை ஆறுமுகம், மகளின் நிலை குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

கணவர் கைது

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த லட்சுமியின் கணவர் கோவிந்தராஜை காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். 

Next Story