ஆலந்தூரில் நகை பறித்த கொள்ளையனுடன் போராடிய பெண் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
ஆலந்தூரில் நகை பறித்த கொள்ளையனுடன் பெண் போராடினார். அவரது சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் கொள்ளையனை விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஆலந்தூர் எம்.கே.என்.சாலையை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 40). இவர் வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது அவருக்கு பின்னால் ஓடிவந்த ஒருவர் திடீரென ஜெயந்தி கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார்.
இதை சுதாரித்துக்கொண்ட ஜெயந்தி, நகையை பறிக்க விடாமல் கையால் பிடித்துக்கொண்டு கொள்ளையனுடன் போராடியபடி ‘திருடன், திருடன்’ என கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
பொதுமக்கள் பிடித்தனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையன் நகையை பலமாக இழுத்தபோது நகை 2 துண்டானது. கையில் சிக்கிய பாதி நகையுடன் அங்கிருந்து தப்பி ஓடிய கொள்ளையனை, விரட்டிச்சென்று மடக்கி பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை பரங்கிமலை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர், திருக்கோவிலூரைச் சேர்ந்த பழனி(42) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story