மூலனூர் அருகே வெடிமருந்து குடோன்களை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


மூலனூர் அருகே வெடிமருந்து குடோன்களை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 July 2018 10:45 PM GMT (Updated: 19 July 2018 8:34 PM GMT)

மூலனூர் அருகே உள்ள வெடிமருந்து குடோன்களை மூடக்கோரி அந்த பகுதி பொதுமக்கள்ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மூலனூர்,

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே சின்னமருதூர் கிராமம் பிச்சைக்கல்படி என்ற ஊரில் 500-க்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகிறார்கள். இந்த பகுதியில் ஹனுமான் எக்ஸ்பிளோசிவ்ஸ் என்ற பெயரில் 7 குடோன்கள் கட்டி அங்கு வெடி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அந்த குடோன்களில் அருகில் வெடிமருந்து தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த குடோன்களை மூட வேண்டும் என்றும், அங்கு வெடி மருந்து தொழிற்சாலை அமைக்க கூடாது என்றும் அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த குடோன்கள் இருக்கும் பகுதிக்கு நேற்று மாலையில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது வெடிமருந்து குடோன்களை உடனே மூட வேண்டும் என்றும், வெடிமருந்து தொழிற்சாலை அமைக்க கூடாது என்றும் கூறினார்கள். இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. அதன்பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். அந்த போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- இந்த வெடிமருந்து குடோனாலும், அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர்மாசுபட்டு உள்ளது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீருக்கே நாங்கள் அலைய வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடோனில் இருந்து வெளியேறும் புகை காற்றில் கலந்து மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. தற்போது கட்டப்பட்டுள்ள ஒரு குடோனில் மட்டும் 50 டன் வெடி பொருட்கள் வைக்க முடியும். எனவே 7 குடோன்களிலும் வெடிமருந்து வெடிக்கும் போது சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்படும். எனவே இந்த குடோன்களை மூட வேண்டும். மேலும்அங்கு வெடி மருந்து தொழிற்சாலை அமைக்க கூடாது. இவ்வாறுஅவர்கள் கூறினார்கள்.

Next Story