மின்விளக்கு கம்பங்கள் இல்லாததால் இருளில் மூழ்கி கிடக்கும் புழல் கேம்ப்-சூரப்பட்டு சாலை


மின்விளக்கு கம்பங்கள் இல்லாததால் இருளில் மூழ்கி கிடக்கும் புழல் கேம்ப்-சூரப்பட்டு சாலை
x
தினத்தந்தி 19 July 2018 11:30 PM GMT (Updated: 19 July 2018 9:25 PM GMT)

மின்விளக்கு கம்பங்கள் இல்லாததால் சென்னை புழல் கேம்ப்-சூரப்பட்டு சாலைகள் இருளில் மூழ்கி காணப்படுகின்றன.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் புழல் கேம்ப் மற்றும் சூரப்பட்டு பகுதிகள் வருகின்றன. இந்த சாலை வழியாக அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல் போன்ற இடங்களுக்கு செல்லலாம். இப்பகுதியில் கல்வி நிலையங்கள், கல்லூரிகள், புழல் போலீஸ் குடியிருப்பு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஏராளமான வீடுகளும் அமைந்துள்ளன.

எனினும் புழல் கேம்ப் முதல் சூரப்பட்டு வரையிலான சாலையில் மின்கம்பங்கள் அமைக்கப்படாமல் இருந்து வருகிறது. எனவே இந்த சாலைகள் இரவு 7 மணிக்கு மேல் மின்சாரம் இல்லாத ஊர் போன்று இருளில் மூழ்கி காணப்படுகிறது.

இருள் மயமாக காட்சியளிப்பதால் சமூக விரோத செயல்களுக்கு வழிவகுக்கின்றன. மேலும் சாலையின் இருபுறங்களில் மரங்கள், செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், பாம்பு போன்ற விஷ ஜந்துகளும் சாலையில் உலவுகின்றன. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையை ஒருவித அச்சத்துடனேயே அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கடந்து வருகின்றனர்.

அச்ச உணர்வு

இதுகுறித்து புழல் கேம்ப்-சூரப்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

சென்னை நகரின் சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் இரவை பகலாக்கும் வண்ணம் மின்விளக்குகள் ஜொலித்து வருகின்றன. ஆனால் புழல் கேம்ப்- சூரப்பட்டு இடையிலான சாலையில் பல ஆண்டுகளாக மின்கம்பங்கள் அமைக்கப்படாமல் உள்ளது.

இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்தும்போது ஏதோ ‘திகில்’ நிறைந்த காட்டுக்குள் நுழைவது போன்ற அச்ச உணர்வு ஏற்படுகிறது.

சட்டவிரோத செயல்கள்

செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. சாலையில் அமர்ந்து மது அருந்துதல், பாலியல் தொழில் போன்ற சட்டவிரோத செயல்களும் துணிச்சலாக நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புழல் கேம்ப்- சூரப்பட்டு வரையிலான சாலையில் குறிப்பிட்ட இடைவெளிகளில் மின்விளக்கு கம்பங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக விரோத செயல்களில் இருந்து அப்பகுதியை மீட்க வேண்டும். மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமின்றி பயணிக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story