தமிழகத்தில் நடந்த வருமானவரி சோதனையில் எந்தவித அரசியல் கண்ணோட்டமும் இல்லை


தமிழகத்தில் நடந்த வருமானவரி சோதனையில் எந்தவித அரசியல் கண்ணோட்டமும் இல்லை
x
தினத்தந்தி 19 July 2018 10:15 PM GMT (Updated: 19 July 2018 9:33 PM GMT)

தமிழகத்தில் நடந்த வருமானவரி சோதனையில் எந்தவித அரசியல் கண்ணோட்டமும் இல்லை என்று சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இல.கணேசன் கூறினார்.

சேலம்,

சேலம் மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில், மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை மற்றும் ஆடிட்டர் ரமேஷ் நினைவு தின பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இதற்கு சேலம் மாநகர் மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சசிகுமார் வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் சிவகாமி பரமசிவம், கிழக்கு மாவட்ட தலைவர் மாணிக்கம், கோட்ட பொறுப்பாளர் முருகேசன், மேற்கு மாவட்ட தலைவர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு விருந்தினராக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2019-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் எதிர்க்கட்சியினருக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்ற காரணத்தால் தான், பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறார்கள். தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தான் தற்போது பேச உள்ளார்கள். இதற்கு சரியான பதிலடி கிடைக்கும். தற்போது தமிழ்நாட்டில் மட்டும் அல்ல ஒட்டு மொத்த இந்தியாவிலும் பாலியல் பலாத்காரம் செய்தி வந்து கொண்டு உள்ளது. 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்க சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. மத்திய அரசு பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ளது.

பெருந்தலைவர் காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு பசி என்றால் என்னவென்று தெரியும். அதனால் தான் அவர்கள் ஆட்சியில் இருந்த போது பொதுமக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். பிரதமர் மோடி அடுப்பு ஊதும் பெண்களுக்கு புகையில்லா அடுப்பு (சமையல் கியாஸ் சிலிண்டர்) வழங்கி சாதனை படைத்து உள்ளார்.

ஆதார் அட்டை மூலம் போலிகள் தடுக்கப்பட்டு உள்ளது. மேலும் முறையாக வரி கட்டுகிறார்கள். ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையில் சேர்க்க வேண்டும். அதேபோன்று குடியுரிமை அட்டையாகவும் மாற்ற வேண்டும். 2019-ம் ஆண்டு தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று, மீண்டும் மோடி தான் பிரதமராக வருவார். மழைநீர் கடலில் கலக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். தமிழகத்தில் நடந்த வருமான வரி சோதனையில் எந்தவித அரசியல் கண்ணோட்டமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் சேலம் மாநகர் பொது செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Next Story