ரூ.200 கோடியில் மெட்ரோ ரெயில் நிறுவனம்–இன்போசிஸ் அறக்கட்டளை இடையே ஒப்பந்தம்


ரூ.200 கோடியில் மெட்ரோ ரெயில் நிறுவனம்–இன்போசிஸ் அறக்கட்டளை இடையே ஒப்பந்தம்
x
தினத்தந்தி 20 July 2018 5:30 AM IST (Updated: 20 July 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

ரூ.200 கோடியில் எலெக்ட்ரானிக் சிட்டியில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் இன்போசிஸ் அறக்கட்டளை இடையே குமாரசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

பெங்களூரு, 

ரூ.200 கோடியில் எலெக்ட்ரானிக் சிட்டியில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் இன்போசிஸ் அறக்கட்டளை இடையே குமாரசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தம் கையெழுத்தானது

மென்பொருள் உற்பத்தியில் உலக அளவில் பிரபலமாக விளங்கும் இன்போசிஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இன்போசிஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.200 கோடி செலவில் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள கோனப்பன அக்ரஹாராவில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

முதல்–மந்திரி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் அஜய்சேட் மற்றும் இன்போசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதா மூர்த்தி ஆகியோர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் குமாரசாமி பேசியதாவது:–

முன்மாதிரியாக திகழ்கிறது

இன்போசிஸ் அறக்கட்டளை சார்பில் பல்வேறு சமூக சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த அமைப்பு பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்க ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனம் பிற தனியார் நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. உலக அளவில் பெங்களூரு நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் மக்கள்தொகை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் உண்டாகி வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மெட்ரோ ரெயில் சேவை தேவைப்படுகிறது.

பெங்களூருவில் ஏற்கனவே 42 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 2–ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோனப்பன அக்ரஹாராவில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கும் பொறுப்பை இன்போசிஸ் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டுள்ளது.

புத்தகங்களை எழுதி இருக்கிறார்

இந்த அறக்கட்டளையை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டுமின்றி சுதா மூர்த்தி கன்னடத்தில் பல்வேறு புத்தகங்களை எழுதி இருக்கிறார். அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். அவர் தனது அனுபவங்களை புத்தகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார். சுதா மூர்த்தி நடத்தி வரும் இன்போசிஸ் அறக்கட்டளைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் மாநில அரசு வழங்க தயாராக உள்ளது. இதேபோல் பிற தனியார் நிறுவனங்களும் சமூக சேவையாற்ற வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

இதில் துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் பேசியதாவது:–

உலக அளவில் பெங்களூரு நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இங்குள்ள போக்குவரத்து பிரச்சினை அனைவருக்கும் தெரியும். இந்த பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு கடந்த 2006–ம் ஆண்டு குமாரசாமி முதல்–மந்திரியாக இருந்தபோது மெட்ரோ திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பெங்களூருவில் தற்போது 42 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் ஓடுகிறது. இதில் தினமும் சுமார் 4 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். மெட்ரோ 2–ம் கட்ட பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு மெட்ரோ ரெயிலில் தினமும் சுமார் 30 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பான நகரமாக மாற்ற...

இன்போசிஸ் அறக்கட்டளை சார்பில் ஒரு ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது. இது பாராட்டுக்குரியது. தனியார் நிறுவனங்கள் தங்களின் லாபத்தில் 2 சதவீதத்தை சமூக நல பணிகளுக்கு செலவழிக்க வேண்டும் என்று சமூக நல சட்டம் உள்ளது. அதன்படி மற்ற தனியார் நிறுவனங்களும் இதுபோன்ற சமூக சேவைகளை ஆற்ற முன்வர வேண்டும்.

பெங்களூரு நகரை பாதுகாப்பான நகரமாக மாற்ற அரசுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும். கர்நாடகத்தின் நலன் கருதி காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன. இந்த அரசு நீடிக்குமா அல்லது கவிழ்ந்துவிடுமா என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். மக்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்த கூட்டணி அரசு 5 ஆண்டு ஆட்சி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

சுதா மூர்த்தி பேச்சு

இன்போசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதாமூர்த்தி பேசுகையில், “நான் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளேன். ஆனால் தாய் நாடான இந்தியாவில், குறிப்பாக நான் பிறந்த மண்ணான கர்நாடகத்தில் இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. கர்நாடகத்திற்கு நான் சேவையாற்றுவது எனது தாயாருக்கு சேவையாற்றுவது போன்ற திருப்தியை தருகிறது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதில் மெட்ரோ ரெயில் சேவை மிக முக்கிய பங்கு ஆற்றுகிறது. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் ஒரு மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கிறோம். அதை 30 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் பணியையும் ஏற்றுள்ளோம்“ என்றார். இந்த விழாவில் மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, கே.ஜே.ஜார்ஜ், ஜமீர்அகமதுகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒப்பந்தத்தில், கோனப்பன அக்ரஹாராவில் கட்டப்படும் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு இன்போசிஸ் அறக்கட்டளை ரெயில் நிலையம் என்று பெயர் சூட்டப்படும். 2 லட்சம் சதுர அடியில் கட்டப்படும் அந்த ரெயில் நிலையத்தில் 3 ஆயிரம் சதுரஅடி இடம் இன்போசிஸ் அறக்கட்டளைக்கு ஒதுக்கப்படும். அந்த இடத்தில் உள்ளூர் ஓவிய கலைஞர்கள் தங்களின் படைப்புகளை இலவசமாக வைத்து விற்பனை செய்ய முடியும். அந்த ரெயில் நிலையத்தின் மேற்கூரையில் சூரியசக்தி மின்தகடுகள் பொருத்தப்பட்டு சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அந்த மின்சாரம் மூலம் அந்த ரெயில் நிலையத்தின் மின் தேவை பூர்த்தி செய்யப்படும். ரூ.200 கோடி செலவில் அந்த ரெயில் நிலையத்தை அமைக்க இன்போசிஸ் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.


Next Story