காவிரி மேலாண்மை ஆணையம்: மேட்டூர் அணை பூங்காவில் ரூ.1¼ கோடியில் நினைவுத்தூண்


காவிரி மேலாண்மை ஆணையம்: மேட்டூர் அணை பூங்காவில் ரூ.1¼ கோடியில் நினைவுத்தூண்
x
தினத்தந்தி 19 July 2018 10:45 PM GMT (Updated: 19 July 2018 9:54 PM GMT)

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட வெற்றியை நினைவு கூரும் வகையில் மேட்டூர் அணை பூங்காவில் ரூ.1¼ கோடியில் நினைவுத்தூண் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

மேட்டூர் அணையில் இருந்து நேற்று காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

சட்டப்போராட்டங்களுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதன் வெற்றியை நினைவுகூரும் வகையில், மேட்டூர் அணை பூங்கா பகுதியில் நினைவுத்தூண் (ஸ்தூபி) அமைத்தல் மற்றும் மேட்டூர் அணை பூங்காவை மேம்பாடு செய்வதற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மேட்டூர் அணை பூங்கா பகுதியில் நினைவுத்தூண் அமைப்பதற்காக ரூ.1 கோடியே 25 லட்சமும், மேட்டூர் அணைப் பூங்காவை மேம்பாடு செய்வதற்காக ரூ.75 லட்சமும் என மொத்தம் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேட்டூர் அணை கட்டப்பட்டு சுமார் 84 ஆண்டு காலம் ஆகிறது. இந்த 84 ஆண்டு காலத்தில் மேட்டூர் அணை தூர்வாராமல் இருந்தது. நீண்டகாலமாக இருக்கின்ற மேட்டூர் அணையிலே வண்டல் மண் படிந்து அதனுடைய நீரின் கொள்ளளவு குறைந்திருக்கிறது. ஆகவே, வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்வதற்கு நீங்கள் துணைபுரிய வேண்டுமென்று அரசுக்கு இந்த பகுதியில் உள்ள விவசாயிகளும், டெல்டா பாசன விவசாயிகளும் கோரிக்கை வைத்தார்கள்.

அந்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அரசு மேட்டூர் அணையிலிருந்து வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்வதற்கு ஆணையிட்டு, நாள்தோறும் 3 ஆயிரம் லாரியில் மேட்டூர் அணையிலிருந்து வண்டல்மண் எடுக்கப்பட்டு விவசாயிகளுடைய நிலங்களுக்கு இயற்கை உரமாக பயன்படுத்தினார்கள். மேட்டூர் அணையை சுற்றிலும் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாயிகள் இந்த வண்டல் மண்ணை அள்ளி, அவர்களுடைய நிலத்திற்கு இயற்கை உரமாக பயன்படுத்தினார்கள். அந்த விவசாயிகளெல்லாம் என்னிடம் தெரிவித்தார்கள், நீங்கள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை அறிவித்தீர்கள்.

நீண்ட காலமாக நாங்கள் விவசாய நிலத்திற்கு ரசாயன உரத்தைத்தான் வைத்துத்தான் நிலங்களில் பயிர் செய்தோம். இப்போது வண்டல் மண்ணை இயற்கை உரமாக பயன்படுத்தியதன் விளைவாக கூடுதலான விளைச்சலை நாங்கள் பெற்றிருக்கின்றோம் என்று தெரிவித்தார்கள். ஒருபுறம் வண்டல்மண் அள்ளுவதால், அணை தூர்வாரப்படுகிறது, ஆழமாகிறது. மற்றொருபுறம் விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு இயற்கை உரமாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட உன்னதமான திட்டத்தை அரசு அறிவித்து, அந்த திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் தண்ணீர் வடிந்த பிறகு, அந்த அணை பகுதியில் இருக்கின்ற வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக அள்ளிக்கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி, டெல்டா பாசனத்தில் இருக்கின்ற குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுவோம். ஆனால் ஜூன் 12-ந் தேதி போதிய நீர் அணையிலே இல்லாத காரணத்தால், குறுவை சாகுபடிக்கு உரியநேரத்தில் தண்ணீர் திறக்கமுடியவில்லை. இருந்தாலும், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்திலே, டெல்டா பாசனத்தில் இருக்கின்ற விவசாயிகள் குறுவைசாகுபடி செய்யவேண்டும், அப்படி செய்யாமல் போனால் அந்த விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கருதி, குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்தார்.

அந்த வழியிலே வந்த இந்த அரசும் குறிப்பிட்ட காலத்திலே மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கமுடியாத ஒரு சூழ்நிலை இருந்தபோது, மூத்த அமைச்சர்களோடு கலந்து பேசி, இன்றைக்கு டெல்டா பாசன விவசாயிகளுக்கு, அங்கே இருக்கின்ற நிலத்தடி நீரை பயன்படுத்தி, குறுவை சாகுபடி செய்யலாம் என்ற ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு தேவையான உதவிகளையும் செய்வதற்காக, குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிவித்து, அதற்காக ரூ.115 கோடியை அரசு விவசாயிகளுக்கு அளித்து விவசாயிகளை ஊக்கப்படுத்தியது. இதன் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி திட்டத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். எனவே தண்ணீர் இல்லாவிட்டாலும்கூட, இருக்கின்ற நிலத்தடி நீரை வைத்து விவசாயிகள் அந்த பயிரை நடவு செய்ய வேண்டுமென்ற ஒரு நோக்கத்தில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பவானி சாகர் அணைக்கு கிட்டத்தட்ட 24 டி.எம்.சி. தண்ணீர் வந்துவிட்டது. கடந்தகாலம் வெறும் 3 டி.எம்.சி. தண்ணீர்தான் இந்த காலக்கட்டத்தில் இருந்தது. அமராவதி அணை நிரம்பிவிட்டது. முல்லை பெரியாறு அணை நிரம்பிக் கொண்டிருக்கிறது. கோவையில் இருக்கின்ற சிறுவாணி அணை நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. சிறுவாணியில் இருந்துதான் கோவை மாநகர மக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம் செய்யமுடியும். அது வறண்டு இருந்த காரணத்தால் கடுமையான குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. இன்றைக்கு அந்த அணை நிரம்பி வழிகின்றது. அதுமட்டுமல்ல, பெரும்பாலான அணைகள், பரம்பிக்குளம், ஆழியாறு, மணிமுத்தாறு, பாபநாசம் என பல்வேறு மாவட்டங்களில் இருக்கின்ற அணைகள் எல்லாம் இன்றைக்கு நல்ல பருவமழை பெய்ததன் காரணமாக அந்த அணைகளுடைய நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.

எல்லா அணைகளில் இருந்தும் குறித்த காலத்தில் விவசாய மக்களுக்கு பாசன வசதிக்காக, விவசாயம் செய்வதற்காக தண்ணீர் திறக்கப்படும். எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள். சரியாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடவில்லை, ஆகவே நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை என்று தவறான, அவதூறான கருத்தையெல்லாம் தமிழகத்திலே பரப்பி வந்தார்கள். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் என்ன நடவடிக்கையை மேற்கொண்டார்களோ, அதே நடவடிக்கையை தமிழக அரசும் மேற்கொண்டு சட்டப்போராட்டத்தின் மூலமாக விவசாய மக்களுக்கு நிலையான தீர்ப்பை பெற்றுத் தந்திருக்கின்றோம். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதைத்தொடர்ந்து மேட்டூர் அணை பூங்காவில் நினைவுத்தூண் அமைக்கும் பணி மற்றும் மேட்டூர் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டினார்.

Next Story