கல்லூரி மாணவியை கீழே தள்ளி கொன்ற போலி பயிற்சியாளர் மீது மேலும் பல வழக்கு


கல்லூரி மாணவியை கீழே தள்ளி கொன்ற போலி பயிற்சியாளர் மீது மேலும் பல வழக்கு
x
தினத்தந்தி 20 July 2018 3:31 AM IST (Updated: 20 July 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே கல்லூரி மாணவியை கீழே தள்ளி கொன்ற போலி பயிற்சியாளர் மீது மேலும் பல வழக்குகள் போடப்பட உள்ளன. இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,


கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் விராலியூரில் கலைமகள் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்பட்டது. அப்போது கீழே மாணவர்கள் வலையை விரித்து பிடித்து நிற்க 2-வது மாடியில் இருந்து மாணவி லோகேஸ்வரியை (வயது 19), பயிற்சியாளர் ஆறுமுகம் (31) குதிக்க கூறினார்.

அப்போது கீழே குதிக்க தயங்கிய மாணவியை, பயிற்சியாளர் பிடித்து கீழே தள்ளினார். இதில் கீழே விழுந்தபோது முதல் மாடியில் உள்ள ஷன் சேடில் லோகேஸ்வரியின் தலை மோதியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெறவில்லை என்பதும், போலியாக சான்றிதழ் தயாரித்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் அந்த போலி சான்றிதழை வைத்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணம் வசூலித்து பயிற்சி அளித்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர் மீது மோசடி செய்தல் என்ற பிரிவின் கீழ் கூடுதல் வழக்கும் பதிவு செய்யப்பட் டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த ஆறுமுகம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்ததில் சென்னையை சேர்ந்த கும்பலுக்கும், தனியார் தொண்டு நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

எனவே போலீசார் சிறையில் இருக்கும் ஆறுமுகத்தை கோர்ட்டு அனுமதி பெற்று 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் அவரை போலீசார் சென்னை மாம்பாக்கத்தில் இருக்கும் அவருடைய அலுவலகம் மற்றும் வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு இருந்த கணினி மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவைகளா? அல்லது உண்மையானதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிவகாசியை சேர்ந்த சிலர் தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின் போலி சான்றிதழையும், போலி முத்திரையையும் தயாரித்து கொடுத்தது தெரியவந்தது. எனவே அது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து தனிப்படையை சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

போலி பயிற்சியாளரான ஆறுமுகம் சென்ற இடங்களில் எல்லாம் தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிலர் உதவி செய்து உள்ளனர். எனவே அவர்களுக்கும், போலி சான்றிதழ், முத்திரை தயாரித்ததற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஆறுமுகம் மீது 2 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. அவர் தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின் சான்றிதழ், முத்திரையை போலியாக தயாரித்து உள்ளார். இதுதவிர அவர் பலருக்கு சான்றிதழும் கொடுத்துள்ளார். இது மிகவும் தவறான செயல் ஆகும். எனவே அவர் மீது தனித்தனியாக மேலும் பல வழக்குகள் பதிவு செய்ய முடிவு செய்து உள்ளோம். எந்தெந்த வழக்குகள் பதிவு செய்வது என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

ஆறுமுகம் ஒரு மோசடி பேர்வழியாக உள்ளார். அவரிடம் உள்ள சான்றிதழ்கள் அனைத்துமே போலியானது ஆகும். எனவே அவற்றை தயாரித்து கொடுத்தது யார்? இதன் பின்னணியில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

போலி பயிற்சியாளரான ஆறுமுகத்துக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியுடன் போலீஸ் காவல் முடிவடைகிறது. இதையடுத்து மாலையில் போலீசார் அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்த வழக்கில் போதிய தகவல்களை நாங்கள் பெற்று விட்டோம். தேவைப்பட்டால், கோர்ட்டில் அனுமதி பெற்று ஆறுமுகத்தை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை செய்வோம் என்றனர். 

Next Story