அமெரிக்காவில் இருந்தபடி ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் தமிழக என்ஜினீயர்கள்
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமெரிக்காவில் வாழும் தமிழக என்ஜினீயர்கள் ‘ஸ்கைப்’ என்ற சமூக வலைதளம் மூலம் வகுப்புகள் எடுத்து வருகின்றனர்.
தேனி,
தேனி அல்லிநகரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்து, பலவிதமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா ஆலோசனையின் பேரில், தமிழாசிரியர் செந்தில்குமார் முயற்சியால் அமெரிக்காவில் வாழும் தமிழகத்தை சேர்ந்த மென்பொருள்(சாப்ட்வேர்) என்ஜினீயர்கள் ஆங்கில இலக்கணம் கற்றுக் கொடுத்து, ஆங்கில பேச்சுப் பயிற்சி அளித்து வருகின்றனர்.
கடந்த 2 வாரகாலமாக இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ‘ஸ்கைப்’ எனப்படும் சமூக வலைதள செயலி வாயிலாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். ‘ஸ்கைப்’ வலைதளமானது நேரடி வீடியோ காட்சிகள் மூலம் உரையாடும் வசதியை கொண்டது. அமெரிக்காவில் இருந்தபடி அல்லிநகரம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் எடுத்து வருகின்றனர். இதற்காக பள்ளியில் ஒரு வகுப்பறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பள்ளியின் தமிழாசிரியர் செந்தில்குமார் கூறியதாவது:-
அமெரிக்காவில் மென்பொருள் என்ஜினீயர்களாக பணியாற்றும் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து இதுபோல் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பயிற்சி அளித்து வருகின்றனர். நமது கிராமம், நமது கடமை என்ற பெயரில் இந்த பயிற்சி அளிக்கின்றனர். இந்த பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக கவிதா பாண்டியன் என்பவர் உள்ளார். சமூக வலைதளம் மூலம் அவருடன் ஏற்பட்ட நட்பு, இப்படி ஒரு திட்டத்தை அவர்கள் செயல்படுத்தி வருவதை அறிய வைத்தது. அல்லிநகரம் பள்ளிக்கு இதை செயல்படுத்த விருப்பம் தெரிவித்தவுடன், தினமும் ஒரு மணி நேரம் வீதம் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பயிற்சி அளித்து வருகின்றனர்.
கடந்த 2 வாரமாக நடந்து வரும் பயிற்சியின் மூலம் மாணவ, மாணவிகளின் ஆங்கிலம் கற்கும் திறன் மேம்பட்டுள்ளது. பேசுவதற்கே கூச்சப்பட்ட மாணவ, மாணவிகள் தற்போது ஓரளவு ஆங்கிலம் பேச தொடங்கி விட்டனர். ஏற்கனவே இந்த பள்ளிக்கு அரசு மூலம் புரொஜக்டர் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளதால் அதன் மூலம் இந்த பயிற்சியை தொடர்வது எளிதாகி விட்டது. இந்த பள்ளிக்கு அமெரிக்காவில் இருந்தபடி பாலகுரு செந்தில்குமார், பட்டு திருவேங்கடம், அருணாசலம் ராமநாதன், ராஜமுருகன், கலைசெல்வம் ஆகிய 5 பேரும் பயிற்சி அளித்து வருகின்றனர். தற்போது 8, 9-ம் வகுப்பு ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் சுமார் 40 மாணவ, மாணவிகளுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, பயிற்சி அளிக்கும் அமெரிக்காவில் உள்ள அருணாசலம் ராமநாதனை தொடர்புகொண்டு கேட்ட போது, ‘நான் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறேன். அமெரிக்காவில் வாழும் தமிழகத்தை சேர்ந்த என்ஜினீயர்கள் 30 பேர் ஒரு குழுவாக இணைந்துள்ளோம். நாங்கள் அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் வசித்து வருகிறோம். இணையதளம் மூலம் குழுவாக இணைந்து எங்களால் முடிந்த அளவுக்கு தமிழகத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். சுமார் 10 ஆண்டுகளாக இதை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் 35-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தற்போது இதுபோல் வகுப்புகள் எடுத்து வருகிறோம். நமது கிராமப்புற மாணவ, மாணவிகள் தயக்கம் இன்றி ஆங்கில மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார்.
Related Tags :
Next Story