வாலிபர் மர்ம சாவு: கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை


வாலிபர் மர்ம சாவு: கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 19 July 2018 10:54 PM GMT (Updated: 19 July 2018 10:54 PM GMT)

தேனி அருகே விவசாய தோட்டத்தில் வாலிபர் மர்மமாக இறந்து கிடந்தார். அவரை மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் கொலை செய்துள்ளதாக புகார் கூறி உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தேனி,


தேனி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த சீனிமுத்து மகன் முத்துக்குமார் (வயது 27). இவர், தந்தையுடன் அருகில் உள்ள கோணாம்பட்டி பகுதியில் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவர் தோட்டத்துக்கு வேலைக்கு சென்றால் அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம்.

கடந்த 15-ந்தேதி வீட்டில் இருந்து தோட்டத்துக்கு சென்றவர் திரும்பி வரவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தோட்டத்தில் உள்ள மோட்டார் அறை அருகில் பிணமாக கிடந்தார். இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய தந்தை சீனிமுத்து கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முத்துக்குமார் கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும், கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலையில் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் வந்து முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘கோணாம்பட்டி அருகில் வைகை ஆற்றில் மணல் கடத்தல் நடப்பது குறித்து போலீசாருக்கும், வருவாய்த்துறைக்கும் முத்துக்குமார் தகவல் கொடுத்து வந்தார். இதனால், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் அவரை கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது. எனவே, கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். அவருடைய குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று புகார் கூறினர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்படியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. பின்னர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சுருளிராஜா அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story