நண்பர்களுக்காக எஸ்.எஸ்.சி. துணைத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு


நண்பர்களுக்காக எஸ்.எஸ்.சி. துணைத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 20 July 2018 4:45 AM IST (Updated: 20 July 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் எஸ்.எஸ்.சி. துணைத் தேர்வில் நண்பர்களுக்காக 3 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத முயன்றனர். இது தொடர்பாக 6 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புனே, 

புனேயில் எஸ்.எஸ்.சி. துணைத் தேர்வில் நண்பர்களுக்காக 3 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத முயன்றனர். இது தொடர்பாக 6 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

துணைத் தேர்வு

மராட்டியத்தில் எஸ்.எஸ்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு தற்போது, துணைத் தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வை மாணவர்கள் எழுதி வருகின்றனர். இந்தநிலையில், மராத்தி மொழிப்பாட தேர்வை புனே சுக்ரவார் பேத் பகுதியில் உள்ள தேர்வு மையத்துக்கு வந்திருந்த மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை கண்காணிப்பாளர்கள் சோதித்து தேர்வறைக்குள் அனுப்பி கொண்டிருந்தனர்.

அப்போது, 3 மாணவர்கள் வைத்திருந்த ஹால் டிக்கெட்டில் அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

ஆள்மாறாட்டம்

அந்த 3 மாணவர்களும் வேறு 3 மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்திருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். இதுபற்றி அந்த தேர்வு மையம் சார்பில் கடக் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் அந்த 3 மாணவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன. அதன் விவரம் வருமாறு:-

பிடிபட்ட 3 மாணவர்களும் புனே சோம்வார் பேத் பகுதியை சேர்ந்தவர்கள். மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்பு தேர்வில் 3 பேரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தனர்.

அதே நேரத்தில் அவர்களது நெருங்கிய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த 3 மாணவர்கள் 4 பாடங்களில் தோல்வி அடைந்தனர்.

6 பேர் மீது வழக்குப்பதிவு

தேர்ச்சி அடைந்த 3 மாணவர்களும் ஜூனியர் கல்லூரியில் சேர்ந்து விட்டனர். இந்தநிலையில் தான் தோல்வி அடைந்த மாணவர்கள் மூவரும் தங்களுக்காக துணைத் தேர்வை எழுதும்படி அவர்களை வற்புறுத்தி உள்ளனர்.

இதன் பேரில் நண்பர்களை தேர்ச்சி அடைய செய்வதற்காக மேற்படி 3 மாணவர்களும் ஹால் டிக்கெட்டில் இருந்த அவர்களது புகைப்படங்களை கிழித்துவிட்டு தங்களது புகைப்படத்தை ஒட்டி வந்து தேர்வு எழுத முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 6 மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தங்களுக்காக நண்பர்களை வைத்து தேர்வு எழுத முயன்ற 3 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கல்வி வாரியம் தெரிவித்து உள்ளது.

Next Story