கடன், வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி


கடன், வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 19 July 2018 11:24 PM GMT (Updated: 19 July 2018 11:24 PM GMT)

கடன், வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவர் நடத்தி வந்த நிறுவனத்துக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

கொடைக்கானல்,


பழனி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் ஜான்மூர்த்தி (வயது 45). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் உகார்த்தே நகருக்கு வந்தார். பின்னர் அவர், அதே பகுதியில் ஒரு நிறுவனம் நடத்தினார். தன்னிடம் அதிக பணம் இருப்பதாகவும், அதனை சுய உதவிக்குழுவின் மூலம் பொதுமக்களுக்கு கடனாக வழங்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரூ.3 லட்சம் கடன் பெறுவதற்கு ரூ.11 ஆயிரத்து 500-ம், ரூ.5 லட்சம் கடன் பெற ரூ.21 ஆயிரத்து 500-ம் முன்பணமாக செலுத்த வேண்டும் என்று கூறினார். இதனை உண்மையென நம்பி சீனிவாசபுரம், உகார்த்தே நகர், ஆனந்தகிரி பகுதியை சேர்ந்த பெண்கள் அவரிடம் முன்பணம் செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு தலா ஒரு சேலையை ஜான்மூர்த்தி பரிசாக வழங்கினார்.

இதுமட்டுமின்றி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டராக தான் பதவி ஏற்க போவதாகவும், அங்கு யாருக்காவது வேலை வேண்டுமென்றால் தன்னை அணுகலாம் என்று அவர் கூறினார்.

இதனை நம்பி கொடைக்கானல் உட்காட் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி, கிருபா ஆகியோர் ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், மாரியம்மாள், ஜெயலட்சுமி உட்பட 5 பேர் தலா ரூ.1 லட்சத்து 10 ஆயிரமும் கொடுத்தனர். ஆனால் 3 மாத காலம் ஆகியும் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இதேபோல் முன்பணம் செலுத்திய பெண்களுக்கு கடன் கொடுக்காமலும் தாமதம் செய்து வந்தார். இதனால் அவரிடம் பெண்கள் பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள், கொடைக்கானல் ஆர்.டி.ஓ. மோகனிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் ஜான்மூர்த்தியின் அலுவலகத்துக்கு சென்று ஆர்.டி.ஓ. மோகன் விசாரணை நடத்தினார். விசாரணையில், பெண்களிடம் பண மோசடியில் ஈடுபடும் நோக்கத்தில் அவர் நிறுவனம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தை பூட்டி வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

இந்த மோசடி தொடர்பாக, கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மேரி, அமலரசி, புளோரா, லீமா ரோஸ், தமிழ்செல்வி, ஜெயலட்சுமி உள்ளிட்ட பெண்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், கடன் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி 67 பெண்களிடம் ரூ.13 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஜான்மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இவர் நாமக்கல், பழனி, வத்தலக்குண்டு ஆகிய இடங்களை சேர்ந்த பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இவர், கண்பார்வையற்றவர் என்ற அடையாள அட்டையையும் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பணத்தை பறி கொடுத்த பெண்கள், கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது. 

Next Story