தொடர் கனமழையால் முழு கொள்ளளவை எட்டின கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் முதல்-மந்திரி குமாரசாமி சிறப்பு பூஜை


தொடர் கனமழையால் முழு கொள்ளளவை எட்டின கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் முதல்-மந்திரி குமாரசாமி சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 21 July 2018 5:00 AM IST (Updated: 20 July 2018 11:47 PM IST)
t-max-icont-min-icon

தொடர் கனமழையால் முழு கொள்ளளவை எட்டியதால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று சிறப்பு பூஜை செய்தார்.

மண்டியா,

தொடர் கனமழையால் முழு கொள்ளளவை எட்டியதால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று சிறப்பு பூஜை செய்தார்.

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் மாநிலம் முழுவதும் தொடர்ந்து கனமழை கொட்டியது. கர்நாடக கடலோர மாவட்டங்கள், தென்கர்நாடக மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளிலும் பருவமழை இடைவிடாது கொட்டி வருகிறது. இதனால் காவிரி, ஹேமாவதி, கிருஷ்ணா, துங்கா, பத்ரா, கபிலா உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் கிடுகிடுவென நிரம்பின. குறிப்பாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே கண்ணம்பாடியில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணையும் முழுமையாக நிரம்பி விட்டன.

124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்து இருந்தது. இதேபோல் 2284.00 அடி(கடல் மட்டத்தில் இருந்து) கொண்ட கபினி அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. இதனால் கடந்த சில நாட்களாக இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தரிசனம்

கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் 20-ந்தேதி (நேற்று) முதல்-மந்திரி குமாரசாமி சிறப்பு பூஜை செய்வார் என்று மாநில அரசு அறிவித்தது. குமாரசாமி பூஜை செய்ய வரும் போது அணை முழுமையாக நிரம்பி இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் ஹாரங்கி அணைக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு மடிகேரியில் ஓய்வெடுத்த அவர், நேற்று காலை காவிரி ஆற்றின் பிறப்பிடமான தலைக்காவிரி பகுதிக்கு சென்று அங்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டார். இதையடுத்து குமாரசாமி, மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணாவுக்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சாமுண்டி மலைக்கு சென்றார். அங்கு அவர் தனது மனைவி அனிதா குமாரசாமியுடன் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தார்.

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் சிறப்பு பூஜை

இதையடுத்து முதல்-மந்திரி குமாரசாமி, மாலை 3 மணி அளவில் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் அமைந்துள்ள கபினி அணைக்கு சென்றார். அங்கு அவர், கபினி அணைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர், நவதானியங்கள், பூக்கள், புது துணி, வளையல், மஞ்சள், குங்குமம் அடங்கிய முறத்தில் மற்றொரு முறத்தை வைத்து மூடி அதனை குமாரசாமி கபினி அணையில் போட்டு ‘பாகினா’ செய்தார். இதேபோல 12 முறங்கள் அணைக்குள் போடப்பட்டது. அதன்பின்னர் மாலை 4.30 மணி அளவில் முதல்-மந்திரி குமாரசாமி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு சென்றார். அங்கும் அவர், நவதானியங்கள் அடங்கிய முறத்தை அணையில் போடுவதன் மூலம் சிறப்பு பூஜை செய்தார். முன்னதாக அவர், கே.ஆர்.எஸ். அணையில் உள்ள காவிரி தாயின் சிலைக்கு மலர்கள் தூவி சிறப்பு பூஜை செய்தார்.

இதில், மந்திரிகள் டி.கே.சிவக்குமார், ஜி.டி.தேவேகவுடா, சா.ரா.மகேஷ் மற்றும் ஜனதா தளம் (எஸ்), காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டுள்ளது. குமாரசாமி சிறப்பு பூஜை செய்ததையொட்டி கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு

முதல்-மந்திரி குமாரசாமி நேற்று அணைகளுக்கு சிறப்பு பூஜை செய்ததால், 2 அணைகளும் முழு கொள்ளளவை எட்ட வைக்கப்பட்டன. நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில், முழு கொள்ளளவும் அதாவது, 124.80 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 47,952 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 36,453 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதேபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,282 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 36,400 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 36,425 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 2 அணைகளில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 72,878 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Next Story