மந்திரி கே.ஜே.ஜார்ஜூக்கு ஒதுக்கப்பட்டது காவேரி இல்லத்தை காலி செய்ய சித்தராமையா முடிவு


மந்திரி கே.ஜே.ஜார்ஜூக்கு ஒதுக்கப்பட்டது காவேரி இல்லத்தை காலி செய்ய சித்தராமையா முடிவு
x
தினத்தந்தி 21 July 2018 4:30 AM IST (Updated: 21 July 2018 12:02 AM IST)
t-max-icont-min-icon

காவேரி இல்லத்தை காலி செய்ய சித்தராமையா முடிவு செய்துள்ளார். அந்த இல்லம் மந்திரி கே.ஜே.ஜார்ஜூக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

காவேரி இல்லத்தை காலி செய்ய சித்தராமையா முடிவு செய்துள்ளார். அந்த இல்லம் மந்திரி கே.ஜே.ஜார்ஜூக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கேபினட் அந்தஸ்து

கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டுகள் முதல்–மந்திரியாக பதவி வகித்தவர் சித்தராமையா. அவர் பெங்களூரு குமரகிருபா சாலையில் காவேரி என்ற பெயரில் உள்ள அரசு இல்லத்தில் வசித்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிட்டதால் அவர் முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால் அவர் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும். துணை முதல்–மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள பரமேஸ்வர் காவேரி இல்லம் மீது கண் வைத்தார்.

அந்த இல்லத்தை பெற அவர் முயற்சி செய்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த இல்லத்தை விட்டு வெளியேறுவதில் சித்தராமையாவுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஒருங்கிணைப்பு தலைவராக உள்ள சித்தராமையாவுக்கு கேபினட் அந்தஸ்து கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாயின.

காவேரி இல்லத்தை காலி செய்துவிட்டு...

அவ்வாறு கேபினட் அந்தஸ்து கிடைத்தால் அதே இல்லத்திலேயே தொடர்ந்து வசிக்கலாம் என்று சித்தராமையா திட்டமிட்டார். ஆனால் சித்தராமையாவுக்கு எதிர்பார்த்தப்படி கேபினட் அந்தஸ்தை மாநில அரசு வழங்கவில்லை. இந்த நிலையில் அந்த காவேரி இல்லம் தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜூக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் சித்தராமையா ஏமாற்றம் அடைந்துள்ளார். மேலும் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளரான கே.ஜே.ஜார்ஜூம், அந்த வீட்டில் குடியேற மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த காவேரி இல்லத்தை சித்தராமையாவுக்கு வழங்க கே.ஜே.ஜார்ஜ் விருப்பம் தெரிவித்து உள்ளார். ஆனால் இதை சித்தராமையா ஏற்கவில்லை. தான் முதல்–மந்திரியாக இருந்தவர் என்பதால், மந்திரிக்கு ஒதுக்கிய வீட்டில் தங்கினால் அது மாநில மக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என்று தனது ஆதரவாளர்களிடம் சித்தராமையா கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சித்தராமையா காவேரி இல்லத்தை காலி செய்துவிட்டு பெங்களூரு விஜயநகரில் உள்ள தனது சொந்த வீட்டில் குடியேற முடிவு செய்துள்ளார்.


Next Story