பெங்களூரு மாநகராட்சியில் ஊழல் நடந்து இருந்தால் நடவடிக்கை: நம்பகத்தன்மையை காப்பாற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு
பெங்களூரு மாநகராட்சியில் ஊழல் நடந்து இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நம்பகத்தன்மையை காப்பாற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சியில் ஊழல் நடந்து இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நம்பகத்தன்மையை காப்பாற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
நடவடிக்கை எடுக்கப்படும்உடுப்பி சிரூர் மடத்தின் மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமி மரணம் அடைந்துள்ளார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகார் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். இந்த விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூரு மாநகராட்சியில் ஊழல் நடந்து இருப்பதாக கூறுபவர்கள் அதுபற்றிய முழு விவரங்களை என்னிடம் தந்தால் அதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியில் சில மாற்றங்களை செய்யும் பணி நடந்து வருகிறது. நம்பகத்தன்மையை காப்பாற்றும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒப்பந்ததாரர்கள் தேவையை விட அதிகமான எண்ணிக்கையில் துப்புரவு தொழிலாளர்களை நியமனம் செய்தனர். இதனால் சம்பளம் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டது.
மக்கள் மீது சுமைஅதற்காக நாங்கள் தற்போது ‘பயோமெட்ரிக்‘ வருகை பதிவு முறையை அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலம் 18 ஆயிரத்து 300 துப்புரவு தொழிலாளர்கள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் 4 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த நியமனத்தின்போது, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்களையே நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
எனது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் பெங்களூருவை விட்டு வெளியூருக்கு நான் செல்லவில்லை. அதனால் அணைகளின் சமர்ப்பண பூஜைக்கு செல்லவில்லை. அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவதாக மோடி சொன்னார். அதை செய்யவில்லை. பெட்ரோல்–டீசல் விலை உயர்வு மக்கள் மீது சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.