சிரூர் மடாதிபதி மர்ம மரண விவகாரம்: 3 மடாதிபதிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு ரகசிய விசாரணை


சிரூர் மடாதிபதி மர்ம மரண விவகாரம்: 3 மடாதிபதிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு ரகசிய விசாரணை
x
தினத்தந்தி 21 July 2018 4:15 AM IST (Updated: 21 July 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிரூர் மடாதிபதி மர்ம மரணம் விவகாரம் தொடர்பாக 3 மடாதிபதிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு ரகசியமாக விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மங்களூரு, 

சிரூர் மடாதிபதி மர்ம மரணம் விவகாரம் தொடர்பாக 3 மடாதிபதிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு ரகசியமாக விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிரூர் மடாதிபதி மர்ம மரணம்

கர்நாடக மாநிலம் உடுப்பியில் சிரூர் மடம் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த மடத்தின் 30–வது மடாதிபதியாக இருந்து வந்தவர் லட்சுமிவர தீர்த்த சுவாமி. 54–வது வயதான லட்சுமிவர தீர்த்த சுவாமி கடந்த 18–ந்தேதி திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை மடத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை 5 மணி அளவில் லட்சுமிவர தீர்த்த சுவாமி மரணமடைந்தார்.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் மடாதிபதியின் மடத்தின் சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு சிரூர் மடத்தின் வளாகத்தில் அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மடத்தின் வளாகத்திலேயே அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.

3 மடாதிபதிகளிடம் விசாரணை

இதற்கிடையே மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறி மடாதிபதியின் தம்பி லதாவியா ஆச்சார்யா இரியடுக்கா போலீசில் பரபரப்பு புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, புத்திகே மடத்தை தவிர கிருஷ்ணா மடம் உள்பட மற்ற 6 மடங்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமி கூறியதாகவும், இதனால் மடாதிபதியின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவருடைய வக்கீல் ரவிகிரண் முருடேஸ்வர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று காலை உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமண் நிம்பர்கி சிரூர் மடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் லட்சுமிவர தீர்த்த சுவாமி, கிரிமினல் வழக்கு தொடர போவதாக தெரிவித்த மடங்களில் 3 மடங்களை சேர்ந்த மடாதிபதிகளை அழைத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், எந்த மடங்களை சேர்ந்த மடாதிபதிகள் விசாரிக்கப்பட்டனர் என்பது தொடர்பாக தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

ஐ.ஜி. அருண் சக்கரவர்த்தி ஆய்வு

இந்த நிலையில் மேற்கு மண்டல ஐ.ஜி. அருண் சக்கரவர்த்தி நேற்று மதியம் உடுப்பி சிரூர் மடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அவருடன் உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமண் நிம்பர்கியும் வந்தார். அவர் சிரூர் மடத்தில் உள்ள அவருடைய சீடர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

மேலும் சிரூர் மடத்தின் சமையல் அறையில் உள்ள பொருட்களை ஆய்வுக்காக அனுப்பி வைக்க ஐ.ஜி. அருண் சக்கரவர்த்தி உத்தரவிட்டார். மேலும் மடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் அவர் ஆய்வு செய்தார். சிரூர் மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமி மர்ம மரணம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.


Next Story