நாமக்கல்லில் சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்த கூலித்தொழிலாளி


நாமக்கல்லில் சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்த கூலித்தொழிலாளி
x
தினத்தந்தி 21 July 2018 4:15 AM IST (Updated: 21 July 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் சாக்கடை கால்வாயில் கூலித்தொழிலாளி பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்,

கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 48). லேத் பட்டறை கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பரமேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

லட்சுமணன் நேற்று முன்தினம் நாமக்கல் அருகே உள்ள ஆர்.பி.புதூரில் சகோதரர் ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று உள்ளார். பின்னர் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்வதாக கூறிச்சென்ற லட்சுமணன் வீட்டிற்கு செல்லவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை நாமக்கல் டவுன் சேந்தமங்கலம் ரோட்டில் உள்ள மயானம் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் ஆண் பிணம் ஒன்று கிடந்து உள்ளது. இதை அப்பகுதி வழியாக சென்றவர்கள் கண்டு நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிணமாக கிடந்தது கரூரை சேர்ந்த லட்சுமணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அவர் தவறி சாக்கடையில் விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story