லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு
லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சரக்குகள் தேங்கும் அபாயமும் உள்ளது.
ஈரோடு,
நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். டீசல் விலையை 3 மாதத்துக்கு ஒருமுறை நிர்ணயம் செய்ய வேண்டும். வாகனங்களுக்கு 3–ம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்திலும் நேற்று லாரிகள் ஓடவில்லை. அதிகாலை நேரத்தில் பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து திரும்பிய லாரிகள் மட்டும் சரக்குகளுடன் சம்பந்தப்பட்ட சரக்கு கிடங்குக்கு கொண்டு வரப்பட்டன. ஈரோட்டில் இருந்து நேற்று லாரிகள் எதுவும் புறப்படவில்லை. நரிப்பள்ளத்தில் உள்ள லாரிகள் நிறுத்தத்தில் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. லாரி டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். பின்னர் அங்கேயே படுத்து பொழுது போக்கினார்கள்.
ஈரோடு குப்பைக்காடு பார்சல் கிடங்குகள் உள்ள பகுதியில் நேற்று வந்த லாரிகளில் இருந்து சரக்கு இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அந்த லாரிகள் காலியானதும் லாரி நிறுத்தும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள் அனைத்தும் கிடங்குகளில் தேங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதுபோல் சுமைதூக்கும் தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதுபற்றி ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் துரைசாமி கூறியதாவது:–
ஈரோடு மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் லாரிகள் உள்ளன. இங்கிருந்து மஞ்சள், ஜவுளிகளை ஏற்றிக்கொண்டு புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு சுமார் 2 ஆயிரத்து 500 லாரிகள் சென்று வருகின்றன.
கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு சுமார் 1000 லாரிகள் சென்று வருகின்றன. பிற லாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருகின்றன. மஞ்சள், ஜவுளி, எண்ணை, புண்ணாக்கு என்று ஏராளமான பொருட்கள் ஈரோட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு தினசரி கொண்டு செல்லப்படுகின்றன. வட மாநிலங்களில் இருந்தும் பல்வேறு பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. லாரிகள் வேலை நிறுத்தத்தால் சரக்குகள் கொண்டு செல்வது அடியோடு நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் வர்த்தகம் மேலும் பாதிக்கும். இதுபோல் சுங்கசாவடிகள் மூலம் கிடைக்கும் வருவாயும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனவே அரசு லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களின் வாழ்வாதார பிரச்சினைக்காக வைத்து இருக்கும் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்று எங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சரக்குகள் தேங்குவதை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் சரக்கு ரெயில்களில் பொருட்களை அனுப்பலாம் என்று அறிவித்து இருந்தது. ஆனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று கூடுதலாக பொருட்கள் எதுவும் அனுப்பப்படவில்லை என்று பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி பார்சல் நிறுவன பணியாளர் ஒருவர் கூறும்போது, ரெயிலில் சரக்குகள் அனுப்புவது என்பது மிகப்பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியம். லாரிகளில் பொருட்களை அனுப்புவது என்றால் சிறு நகரங்களுக்கு கூட அனுப்ப முடியும். நம்மிடம் இருந்து பொருட்கள் வாங்குபவர்கள் சுலபமாக குறைந்த தூரத்தில் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். சில லாரி பார்சல் நிறுவனங்கள் வீடு அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரை பொருட்களை கொண்டு கொடுக்கும் வசதியை செய்து உள்ளன. ரெயிலில் அனுப்புவது என்றால் அத்தகைய வசதிகள் கிடையாது. எனவே பெரும்பாலானவர்கள் ரெயிலில் சரக்கு அனுப்புவதை விரும்புவதில்லை என்றார்.
லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி பொருட்கள் தேங்கும் நிலையும், லாரி தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும், பொருட்கள் விலை உயரும் அபாயமும் உள்ளது. எனவே லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் கூறினார்.
லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கத்தில் சுமார் 1000 லாரிகள் ஓடவில்லை. ரங்கசமுத்திரம், கோவை ரோடு, படித்துறை ரோடு, கோட்டுவீராம்பாளையம், வடக்குப்போட்டை மற்றும் லாரி உரிமையாளர்களின் வீடுகள், ரோட்டு ஓரங்களில் ஆங்காங்கே லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இதுகுறித்து சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் எஸ்.பி.எஸ்.பொன்னுசாமி கூறும்போது, ‘சத்தியில் இருந்து கர்நாடகாவுக்கு தினசரி வாழைக்காய், பூ, பேப்பர், வேஸ்ட் பேப்பர் போன்ற பாரங்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் செல்லும். இதேபோல் கர்நாடகாவில் இருந்து நூல்பேல், தேங்காய், தேங்காய் மட்டை, அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரிகள் அதிக அளவில் வந்து செல்லும். சுமார் 1000 லாரிகள் இயக்கப்படவில்லை. அதனால் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதித்துள்ளது. மத்திய–மாநில அரசுகள் உடனடியாக லாரி உரிமையாளர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்‘ என்றார்.
இதேபோல் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அந்தியூர், தவுட்டுப்பாளையம் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து சுமார் 500 லாரிகளை இயக்கவில்லை. இதனால் சக்தி சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படும் கரும்புகள், செங்கல் சூளைக்கு கொண்டு செல்லும் மண் மற்றும் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள செங்கற்கல் தேங்கிக்கிடக்கின்றன.