தண்ணீரின்றி வறண்டு குட்டையாய் மாறிய பெரும்பள்ளம் அணை
பெரும்பள்ளம் அணை தண்ணீரின்றி வற்றி தற்போது குட்டைபோல் காட்சி தருகிறது.
டி.என்.பாளையம்,
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பெரும்பள்ளம் அணை. 1992–ம் ஆண்டு அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் இந்த அணை திறக்கப்பட்டது.
கடம்பூர், மேற்கு கம்பத்ராயன்கிரி, மல்லியம்மன் துர்க்கம் போன்ற இடங்களில் மழை பெய்யும்போது பெரும்பள்ளம் அணைக்கு தண்ணீர் வரும்.
31 அடி உயரம் கொண்ட இந்த அணையின் வலது கரை மூலம் 545 ஏக்கரும், இடது கரை மூலம் 485 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த 2014–ம் ஆண்டு அணை நிரம்பி வினாடிக்கு 1,466 கன அடி தண்ணீர் வெளியேறியது. அதன்பின்னர் கடந்த 4 ஆண்டுகளாக நீர்வரத்து இல்லை. அதனால் அணை வற்றி தற்போது குட்டைபோல் காட்சி தருகிறது.
பெரும்பள்ளம் அணை நிரம்பினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கொண்டையம்பாளையம், கொமராபாளையம், இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், ஏ.ஜி.புதூர், கே.என்.பாளையத்தில் உள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும். ஆனால் 4 ஆண்டுகளாக அந்த பகுதியில் மழை பெய்யவில்லை. அதனால் அணை வறண்டு கிடக்கிறது. மழை எப்போது பெய்யும், அணைக்கு எப்போது தண்ணீர் வரும் என்று அந்த பகுதி பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். மேலும் அணையில் தற்போது தண்ணீர் இல்லாமல் இருப்பதால், இப்போது தூர்வாரினால் அதிக மழைநீரை சேமிக்க முடியும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.