சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலையை அமைக்க விடமாட்டோம்


சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலையை அமைக்க விடமாட்டோம்
x
தினத்தந்தி 21 July 2018 4:15 AM IST (Updated: 21 July 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

‘சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலையை அமைக்க விடமாட்டோம்’ என்று ஜாமீனில் வெளியே வந்த சீமான் கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள கூமாங்காடு என்ற பகுதியில், சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து கருத்து கேட்பதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார். அப்போது அவர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் சீமான் உள்பட 9 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து ஜாமீன் கேட்டு சீமான் தரப்பில் சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 6-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு மோகன்ராம் உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை சிறையில் இருந்து சீமான் ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது அவரை கட்சி தொண்டர்கள் வரவேற்றனர்.

பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம்-சென்னை இடையே அமைய உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்தால் பாதிக்கப்படுகின்ற மக்களை நாங்கள் சந்தித்து கருத்து கேட்கிறோம். அப்போது பொதுமக்கள் கண்ணீருடன் தங்களுடைய பாதிப்புகளை எங்களிடம் தெரிவிக்கின்றனர். அந்த இடத்தில் என்னை கைது செய்வதன் மூலம் மறைமுகமாக மக்களுக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர்.

90 சதவீத மக்கள் நிலத்தை கொடுத்துவிட்டார்கள் என்று கூறும்போது, நாங்கள் மக்களை சந்திப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும். 8 வழி பசுமை சாலையை அமைக்க அரசு முயற்சி செய்யும். ஆனால் ஒருபோதும் அமைக்க போவதில்லை. மேலும் நாங்களும் இந்த சாலையை அமைக்க விடமாட்டோம்.

வருமான வரித்துறையினர் ஒப்பந்ததாரர் வீட்டில் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் கிலோ கணக்கில் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் இவ்வளவு பணம், நகை என்றால் பல இடங்களில் எவ்வளவு இருக்கும். சோதனை என்பது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையில் ஒன்றாகவே கருதுகிறேன். வேண்டும் என்றால் மத்திய, மாநில அரசை எதிர்த்து பேசும் என் வீட்டிற்கு சோதனை நடத்த வரட்டும். மறுபடியும் நான் போலீசாரிடம் மக்களை சந்திக்க அனுமதி கேட்பேன். மறுத்தால் கோர்ட்டு மூலம் அனுமதி பெற்று மீண்டும் மக்களை சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story