நீர்வழி ஓடை ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தக்கோரி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்


நீர்வழி ஓடை ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தக்கோரி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 21 July 2018 4:15 AM IST (Updated: 21 July 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

குண்டடம் அருகே நீர்வழி ஓடை ஆக்கிரமிப்பை தடுத்துநிறுத்தக்கோரி தாராபுரம் துணை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், குண்டடம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் காற்றாலை அமைத்து வருகிறார்கள். அப்போது அவர்கள் நீர்வழித்தடங்களையும், வண்டிப்பாதைகளையும் ஆக்கிரமித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று தாராபுரத்தில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு குண்டடம் அருகே உள்ள நந்தவனம்பாளையம் பகுதியை விவசாயிகள் வந்தனர். பின்னர் அவர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் தாராபுரம் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

குண்டடம் அருகே உள்ள வீரணந்தோட்டம், தோப்புத் தோட்டம், நீலத்தோட்டம், ஒவ்வாங்காடு, வேப்பங்காடு, புளியங்காடு, தட்டான் துண்டு, கள்ளிமேட்டுக்காடு ஆகிய தோட்டப்பகுதிகள் உள்ளன. இப்பகுதி வழியாக நீர்வழி ஓடை ஒன்று செல்கிறது. இந்த ஓடை வழியாகத்தான் பி.ஏ.பி. உபரி நீர் மற்றும் கசிவு நீர் செல்கிறது. மேலும் மழைக்காலங்களில் இந்த ஓடை வழியாகத்தான் இப்பகுதியில் பெய்யும் மழை நீர் முழுவதும் வழிந்து செல்லும். இதனால் இந்த ஓடையில் 4 கசிவு நீர் குட்டைகளை அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நிலத்தடி நீர் கிடைத்து வருகிறது.

இந்த ஓடைக்கரையின் வழியாகத்தான் எங்களது தோட்டங்களுக்கு சென்று வருகிறோம். இந்த நிலையில் எங்கள் பகுதியில் பல காற்றாலை நிறுவனங்கள் தனியார் நிலங்களை விலைக்கு அல்லது ஒப்பந்த அடிப்படையில் பெற்று அதில் காற்றாலை அமைத்து வருகின்றனர். அதற்காக அதிக எடை கொண்டதும், நீளமானதுமான தளவாடங்களை லாரிகளில் ஏற்றி வருகின்றனர். அதற்காக எங்கள் பகுதியில் உள்ள ஓடை கரையை அழித்தும், ஓடைகளில் மண்ணைக்கொட்டியும் புதிதாக வழித்தடம் அமைக்க இரவு நேரங்களில் காற்றாலை நிறுவனத்தினர் முயற்சி செய்து வருகின்றனர். அதனை அவ்வப்போது நாங்கள் தடுத்து வருகிறோம்.

இந்த நிலையில் அந்த ஓடைப்பகுதியில் காற்றாலை நிறுவனத்தினர் சாலை அமைத்தால் நீர்வழிப்பாதை மாறிவிடும். மேலும் அந்த ஓடையின் வழியே உயர்மின் அழுத்த மின்கம்பங்கள் அமைத்தால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த நீர்வழிப்பாதையில் சாலை மற்றும் மின்கம்பங்கள் அமைக்க அரசு அனுமதியும் கொடுக்கவில்லை. ஆனாலும் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் சட்டவிரோதமாக சாலை அமைக்கவும், மின்கம்பங்கள் நடவும் முயற்சி செய்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் நான்கு கார்களில் வந்த ருத்ராவதியை சேர்ந்த தமிழ்செல்வன், திருமலைசாமி, செங்காளி பாளையத்தை சேர்ந்த கோபால், வெங்கடேஷ் மற்றும் கெருடமுத்தூரை சேர்ந்த செந்தில் உட்பட 10 பேர் பொக்லைன் எந்திரத்தை கொண்டு நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து புதிதாக ரோடு போட முயன்றனர்.

அப்போது ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்கள் செயல்களை தடுத்தோம். அதற்கு அவர்கள் கத்தி, இரும்பு குழாய் போன்ற ஆயுதங்களை கொண்டு எங்களை தாக்க வந்தனர். மேலும் எங்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து சென்றனர்.

எனவே நீர்வழிப்பாதையை ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும், மேலும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு எங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இதனால் தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story