சிவகிரியில் செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சீரமைக்கக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சிவகிரியில் செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சீரமைக்கக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 July 2018 4:00 AM IST (Updated: 21 July 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சீரமைக்கக்கோரி நேற்று சிவகிரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகிரி, 

செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சீரமைக்கக்கோரி நேற்று சிவகிரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க. ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் சிவகிரியில் நேற்று தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள செண்பகவல்லி தடுப்பணையின் தடுப்புச்சுவர் உடைந்து பல ஆண்டுகளாக கட்டப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் முழுவதும் கேரளாவை நோக்கி கடலில் சென்று வீணாக கலக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்காத தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிவகிரி பஸ்நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர செயலாளர்கள் செண்பக விநாயகம், குருசாமி, சரவணன், மாநில விவசாய அணி துணை செயலாளர் செல்லப்பா, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் அப்துல்காதர், ஆறுமுகச்சாமி, ஒன்றிய துணை செயலாளர் மாரித்துரை, வேலம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் வரவேற்றார்.

தமிழக அரசை ஏமாற்றுகிறது

மாநில விவசாய அணி செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘செண்பகவல்லி தடுப்பணை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மட்டுமல்லாமல் குடிநீர் ஆதாரத்துக்கும் பயன் பெற்று வந்தது. தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு 60 ஆண்டுகள் ஆகியும் அதனை சீரமைப்பதற்கோ அல்லது உடைப்பு பகுதியை கட்டுவதற்கோ கேரள அரசு பல்வேறு வகையான தடைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நமது தமிழக அரசை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வரும். அப்போது செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சீரமைப்பதற்கு அனைத்து முயற்சிகளும் எடுப்போம்’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story