ரசாயனம் கலந்து மீன் விற்பவர்களுக்கு கடும் தண்டனை, தேசிய மீனவர் பேரவை வலியுறுத்தல்


ரசாயனம் கலந்து மீன் விற்பவர்களுக்கு கடும் தண்டனை, தேசிய மீனவர் பேரவை வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 July 2018 5:00 AM IST (Updated: 21 July 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

ரசாயனம் கலந்து மீன் விற்பனை செய்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவை வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

தேசிய மீனவர் பேரவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இளங்கோ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவை சட்டசபையில் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் கேட்காத திட்டங்களையும் அறிவித்துள்ளார். அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது கெட்டுப்போகாமல் இருப்பதற்காக மீன்கள் மீது பார்மலின் எனப்படும் ரசாயனம் தடவி விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

மீனவர்களும், சிறிய வியாபாரிகளும் இதுபோன்ற செயல்களை செய்வதில்லை. பெரிய அளவில் மீன் வியாபாரம் செய்பவர்கள்தான் இதுபோன்ற தவறுகளை செய்கின்றனர். இவ்வாறு ரசாயனங்களை தடவி மீன்களை விற்கும் நிலை புதுச்சேரியில் இல்லை.

மக்கள் அசைவ உணவில் மீன்களுக்கே அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற நிலையில் மீன்களில் ரசாயனம் தடவி விற்பதால் மீன்களை சாப்பிட தயங்குவார்கள். எனவே மீன்களில் ரசாயனம் தடவி விற்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும்.

இதுபோன்ற செயலை செய்து முதல் முறையாக பிடிபடுபவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறை தண்டனையும், 2–வது முறையாக பிடிபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளையும் வழங்கவேண்டும்.

இவ்வாறு இளங்கோ கூறினார்.


Next Story